விளையாட்டு

'உம்ரான் மாலிக் டெஸ்ட் போட்டிக்கு தகுதியானவர்' - முகமது அசாருதீன் ஆதரவு

JustinDurai

'உம்ரான் மாலிக் டெஸ்ட் அணியில் இடம் பெற தகுதியானவர்' என முகமது அசாருதீன் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2022 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வந்த ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 22 வயது இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் ஒவ்வொரு போட்டியிலும் தனது அசுர வேகப் பந்துகளால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து வந்தார். தொடர்ந்து 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசும் உம்ரான் மாலிக் அதிகபட்சமாக இந்த தொடரில் 157 கி.மீ வேகத்தில் பந்துவீசினார். இவரை இந்திய அணியில் சேர்க்க சொல்லி ரவி சாஸ்திரி உள்ளிட்ட பலரும் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக டி20 தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணியை சமீபத்தில் பிசிசிஐ அறிவித்திருந்தது. இதில் ஐபிஎல் நடப்பு தொடரில் பங்கேற்ற 14 ஆட்டங்களில் 22 விக்கெட்டுகள் சாய்த்த ஐதராபாத் அணியின் வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக், பஞ்சாப் அணியின் வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் முதன்முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் உம்ரான் மாலிக் டெஸ்ட் அணியில் இடம் பெற தகுதியானவர் என இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது அசாருதீன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "உம்ரான் மாலிக் டெஸ்ட் அணியில் இடம் பெற தகுதியானவர். அவரது பணிச்சுமையை நிர்வகிப்பது மிகவும் முக்கியமானது, தவறினால் அவர் காயங்களுக்கு ஆளாக நேரிடும். ஒரு எக்ஸ்பிரஸ் வேகப்பந்து வீச்சாளருக்கு தேவைப்படும் ஆதரவு அவருக்கு வழங்கப்படும் என நம்புகிறேன்'' என அவர் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஆடிவந்த அர்ஷ்தீப் சிங், டெத் ஓவர்களில் சிறப்பாக பந்துவீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ஆவார். குறிப்பாக இந்த சீசனில் அவர் அதிரடி பேட்ஸ்மேன்களுக்கு எதிராக கடைசி ஓவரில் அட்டகாசமாக பந்து வீசினார். டெத் ஓவர்களில் 7.91 எகானமி உடன் ஐபிஎல்லில் பந்துவீசி உள்ளார் அர்ஷ்தீப் சிங். இதன் மூலம் ஐபிஎல்லில் பும்ராவிற்கு அடுத்தபடியாக சிறந்த எகானமி உடன் பந்துவீசிய வீரராக அவர் உள்ளார்.

இதையும் படிக்கலாம்: தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!