விளையாட்டு

அம்பயரின் தவறான முடிவால் அவுட் ஆன தோனி - டிஆர்எஸ் முறையில் மாற்றம் வருமா?

அம்பயரின் தவறான முடிவால் அவுட் ஆன தோனி - டிஆர்எஸ் முறையில் மாற்றம் வருமா?

webteam

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணி, அடுத்து, ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டி, சிட்னியில் நேற்று நடைபெற்றது. இதில், ஆஸ்திரேலிய அணி 34 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 288 ரன் எடுக்க, பின்னர் விளையாடிய இந்திய அணி 254 ரன் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

இந்த கிரிக்கெட் போட்டியில் தோனிக்கு நடுவர் வழங்கிய தவறான முடிவு சர்ச்சையை எற்படுத்தியுள்ளது. ஏனெனில், 4 ரன்னிற்கு 3 விக்கெட் இழந்து இந்திய அணி தடுமாறிய நிலையில், ரோகித் சர்மாவுடன் இணைந்து தோனி நிதானமாக ஆடி அணியை மீட்டார். இருவரும் இணைந்து 100 ரன்னிற்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

தோனி அரைசதம் அடித்து விளையாடிக் கொண்டிருந்தார். சரிவில் இருந்த இந்திய அணி அப்பொழுது வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது தோனியின் விக்கெட் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியது. அதன் பின் வந்தவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தோனி சற்று நேரம் நிலைத்து ஆடியிருந்தால் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும்.

ஏற்கனவே, ராயுடு டிஆர்எஸ் முறையை பயன்படுத்திவிட்டதால் தோனிக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒருவேளை டிஆர்எஸ் வாய்ப்பு இருந்திருந்தால் தோனி தொடர்ந்து விளையாடி இருப்பார்.

இந்நிலையில், DRS முறையை கூடுதலாக பயன்படுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இவ்வாறு முக்கியத்துவம் பெற்றுள்ள DRS முறை என்னவென்பதை பார்க்கலாம்.

DRS என்பது Decision Review System அதாவது நடுவரின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் முறையாகும். பொதுவாக கேட்ச் மற்றும் எல்பிடபிள்யூ ஆகியவற்றை உறுதிசெய்ய இந்த முறை கையாளப்படுகிறது. கள நடுவர் முடிவை மறுபரிசீலினை செய்ய விரும்பும் அணியினர் அடுத்த 15 வினாடிக்குள் டிஆர்எஸ் பரிந்துரைக்கான 'T' வடிவ சமிக்ஞையை காட்ட வேண்டும். கேட்சுகளுக்கு மெதுவாக இயங்கும் கேமரா, இன்ஃப்ராரெட் கேமரா ஆகியவற்றை பயன்படுத்தி பந்து பேட்டில் பட்டதா? என்பதை மூன்றாம் நடுவர் மிக எளிமையாக கண்டறிய முடிகிறது. 

ஆனால், விக்கெட் முன் கால் எனும் எல்பிடபிள்யூ முடிவுக்கோ மூன்றாம் நடுவர் பல விதிகளை ஒன்றன்பின் ஒன்றாக கடைப்பிடிக்க வேண்டி உள்ளது. பந்து லெக் ஸ்டம்ப்புக்கு வெளியே முழுமையாக பிட்சு செய்திருக்க கூடாது, பந்து நேரடியாக பேடிலோ அல்லது பேட்டில் படுவதற்கு முன் பேடிலோ பட்டிருக்க வேண்டும்‌. பந்து பேடில் படும் போது கண்டிப்பாக impact in line அதாவது பந்து ஸ்டம்புக்கு நேர்கோட்டில் இருத்தல் வேண்டும். பந்து பேடில் படாமலிருந்தால் கட்டாயம் ஸ்டம்பை பதம் பார்க்க வேண்டும். இந்த நான்கு விதிகளும் சரியாக இருந்தால் மூன்றாம் நடுவரால் பேட்ஸ்மேன் அவுட் ஆனதாக அறிவிக்கப்படுகிறது. 

சில நேரங்களில் மேற்கண்ட விதிகளில் பந்தின் பரப்பளவு பாதிக்கு மேல் வெளியே இருந்தால் அது நடுவரின் முடிவாக அறிவிக்கப்படுகிறது. அதாவது கள நடுவர் கொடுத்த முதல் தீர்ப்பே முன்றாம் நடுவரால் வழங்கப்படுகிறது. இந்த விதிகளை தாண்டியும் டி.ஆர்.எஸ் முறையில் சர்ச்சைகள் எழுவதை அவ்வப்போது காண முடிகிறது.