விளையாட்டு

இலங்கை - ஆஸி. போட்டியின்போது பந்தை கேட்ச் பிடிக்க முயன்ற நடுவர்.. வைரலாகும் புகைப்படம்!

ச. முத்துகிருஷ்ணன்

இலங்கை - ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி கொழும்புவில் நடைபெற்றது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் தற்போது 1-1 என சமநிலையில் உள்ளது. கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாச ஸ்டேடியத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் பின்ச் (62), மற்றும் டிராவிஸ் ஹெட் (70*) ஆகியோர் பேட்டிங்கில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க, ஆஸ்திரேலியா ஐம்பது ஓவர்களில் மொத்தம் 6 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்களை எடுத்தது. பின்னர் விளையாடிய இலங்கை அணி 48.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 292 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இலங்கை அணியில் பதும் நிசங்க 137 ரன்கள் எடுத்து அசத்தினார். அதேபோல், கவுசல் மெண்டீஸ் 87 ரன்கள் எடுத்து ரிட்டையர் ஹர்ட் ஆனார். 

ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்த இன்னிங்ஸில் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி ஸ்கொயர் லெக்கில் அடித்த பந்தை களத்தில் இருந்த நடுவர் குமார் தர்மசேனா பிடிக்க முயன்றார். இருப்பினும், இறுதியில், அவர் பந்தை அதன் இயல்பான போக்கில் செல்ல அனுமதித்தார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கேட்ச் பிடிக்க முயன்ற நடுவரின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். “கேட்ச்! நடுவர் குமார் தர்மசேனா அதிரடியில் இறங்க விரும்புவது போல் தெரிகிறது... நல்வாய்ப்பாக அவர் அவ்வாறு செய்யவில்லை.” என்று குறிப்பிட்டு பகிரப்பட்ட அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.