விளையாட்டு

அக். 17 to நவ. 14 : அமீரகம், ஓமனில் நடைபெறும் டி20 கிரிக்கெட் உலக கோப்பை- ஐசிசி அறிவிப்பு

EllusamyKarthik

2021 டி20 கிரிக்கெட் உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாட்டில் நடைபெற உள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. முன்னதாக இந்த தொடர் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த தொடரை நடத்தும் ஹோஸ்ட் அணியாக இந்தியா களம் இறங்குகிறது. 

அமீரகத்தில் உள்ள துபாய் சர்வதேச மைதானம், அபுதாபி மற்றும் ஷார்ஜா மைதானத்தில் போட்டி நடைபெற உள்ளது. ஓமனில் ஓமன் கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் போட்டி நடைபெற உள்ளது. 

இந்த தொடரின் முதற்கட்டமாக தகுதி சுற்று 8 அணிகளுக்கு நடைபெற உள்ளது. வங்கதேசம், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நமிபியா,  ஓமன் மற்றும் பப்புவா நியூ கினி ஆகிய அணிகள் இந்த தகுதி சுற்றில் பங்கேற்கின்றன. அதில் முதல் நான்கு இடங்களை பிடிக்கின்ற அணிகள் தொடரில் பங்கேற்க தகுதி பெற்றுள்ள 8 அணிகளுடன் சேர்ந்து சூப்பர் 12 சுற்றில் விளையாடும். 

அக்டோபர் 17 ஆம் தேதி தொடங்கும் இந்த தொடரில் இறுதிப் போட்டி நவம்பர் 14ஆம் தேதி நடைபெறுகிறது. பயோ செக்யூர் முறையில் பல அணிகள் பங்கேற்று விளையாடும் தொடரை அமீரகம் நடத்தியுள்ள காரணத்தினால் இந்த முடிவுக்கு வந்துள்ளதாம் ஐசிசி. இந்தியாவில் இந்த தொடரை நடத்தாமல் போன காரணத்திற்காக தனது ஆதங்கத்தையும் ஐசிசி வெளிப்படுத்தி உள்ளது. 

கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்லதொரு கிரிக்கெட் தொடரை காட்சிப்படுத்த இந்திய கிரிக்கெட் வாரியம், எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் மற்றும் ஓமன் கிரிக்கெட் உடன் ஐசிசி பேசி வருகிறதாம்.