ஊக்கமருந்து சோதனையில் தோல்வி
ஊக்கமருந்து சோதனையில் தோல்வி கோப்பு புகைப்படம்
விளையாட்டு

ஊக்கமருந்து சோதனை தோல்வியால் தமிழக, ஹரியானா தடகள வீராங்கனைகள் இருவர் நீக்கம்! #AsianChampionships

Justindurai S

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நாளை (ஜூலை 12) முதல் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கான இந்திய அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அர்ச்சனா சுசீந்திரன் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த அஞ்சலி தேவி உள்ளிட்ட வீரர், வீராங்கனைகள் தேர்வாகியிருந்தனர்.

இந்நிலையில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்கும் வீராங்கனைகளுக்கு தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு முகமை (NADA) ஊக்கமருந்து சோதனை நடத்தியது. இந்த சோதனையில் அர்ச்சனா சுசீந்திரன் மற்றும் அஞ்சலி தேவி தோல்வி அடைந்தனர். இந்த இருவரிடமும் சேகரிக்கப்பட்ட சிறுநீர் மாதிரியில் அவர்கள் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியிருப்பது நிரூபணம் ஆனது.

இதையடுத்து ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இருந்து அர்ச்சனா சுசீந்திரன் மற்றும் அஞ்சலி தேவி ஆகிய இருவரும் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு முகமையால் நீக்கப்பட்டனர்.

அண்மையில் நடந்த இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் 2 தடகள தொடரில் 100 மீட்டர் ஓட்டத்தில் ஹிமா தாஸை பின்னுக்குத் தள்ளி தங்கப் பதக்கம் வென்றிருந்தார் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை அர்ச்சனா சுசீந்திரன். அதேபோல் மற்றொரு வீராங்கனையான அஞ்சலி தேவி காயம் காரணமாக கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக விளையாடாமல் இருந்துவந்த நிலையில் சமீபத்தில்தான் அணிக்கு திரும்பினார். புவனேஸ்வரில் நடந்த தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 400 மீட்டர் தூரத்தை 51.58 வினாடிகளில் கடந்து அஞ்சலி தேவி அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.