விளையாட்டு

தொப்பியை கழற்றிவிட்டு டிராவிட் உடன் உரையாடிய இலங்கை கேப்டன் : வைரலாகும் புகைப்படம்

webteam

இந்தியா-இலங்கை இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியின்போது மழை குறுக்கிட்ட நேரத்தில், இந்திய அணியின் பயிற்சியாளார் ராகுல்டிராவிட் உடன் இலங்கை அணியின் கேப்டன் தாசுன் ஷானகா உரையாடிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

இந்தியா - இலங்கை இடையேயான மூன்றாவது  மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கொழும்பு நகரில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. 23 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 147 ரன்களை இந்தியா எடுத்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

அப்போது மழை இடைவேளையின் போது இந்திய பயிற்சியாளர் ராகுல்டிராவிட் உடன் இலங்கை கேப்டன் தாசுன் ஷானகா நீண்ட நேரம் கலந்துரையாடினார்.  தன்னுடைய தொப்பியை கழற்றிவிட்டு தாசுன் ஷானகா பேசிக்கொண்டிருந்த புகைப்படங்களை இருநாட்டு ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வைரலாக்கி ராகுல் டிராவிட்டை பாராட்டி வருகின்றனர். ராகுல் டிராவிட், தான் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர், பயிற்சியாளர் என்பதையும் தாண்டி சிறந்த மனிதநேயமிக்க மனிதர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.

இலங்கை வெற்றி: தொடரை வென்றது இந்தியா 

கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணியில் 41 ஆண்டுகளுக்கு பிறகு சஞ்சு சாம்சன், நிதிஷ் ராணா, சேத்தன் சக்காரியா, கிருஷ்ணப்பா கவுதம், ராகுல் சஹார் ஆகிய ஐந்து புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இதற்குமுன்பு ஒரே போட்டியில் 1980 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 வீரர்கள் களமிறங்கியிருந்தனர். டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் அதிகபட்சமாக பிரித்வி ஷா 49 ரன்களும், சஞ்சு சாம்சன் 46 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 40 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

முடிவில் இந்திய அணி 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 225 ரன்களை எடுத்தது. வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் அவிஷ்கா பெர்னான்டோ சிறப்பாக விளையாடி 76 ரன்கள் எடுத்தார். தனது முதல் அரைசதத்தை பூர்த்தி செய்த பனுகா ராஜபக்ச, 65 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். 39 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்து இலங்கை அணி வெற்றி பெற்றது. எனினும் மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அறிமுகப் போட்டியில் விளையாடிய ராகுல் சஹார் 3 விக்கெட்டுகளையும், சக்காரியா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.