விளையாட்டு

பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!

சங்கீதா

திரையுலகில் நடிகர்கள், நடிகைகள், கிரிக்கெட்டில் ஐபிஎல் அணிகள் மற்றும் ஐபிஎல் வீரர்கள் ஆகியோர் பான் இந்தியா அளவில் ஆதிக்கம் செலுத்தியுள்ளவர்கள் யார், யார் என்று ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

சமீபகாலமாக இந்திய திரையுலகில் பான் இந்தியா என்ற வார்த்தை ஆதிக்கம் செலுத்தி வருகிறது. குறிப்பாக பாகுபலி, புஷ்பா, ஆர்.ஆர்.ஆர்., கே.ஜி.எஃப். ஆகிய தென்னிந்தியப் படங்கள், வட இந்தியாவில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருவதால், இந்தியப் படங்கள் என்பதைத் தாண்டி, பான் இந்தியா படங்கள் என்ற வார்த்தை அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த பான் இந்தியா என்ற அங்கீகாரத்தால் தென்னிந்திய நடிகர், நடிகைகள், இயக்குநரர்கள் வட இந்தியாவில் பெருமளவில் ரசிகர்களிடையே புகழடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆர்மேக்ஸ் மீடியா நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் எடுத்த சர்வேயில் இந்திய அளவில் ஆதிக்கம் செலுத்தும் நடிகர்கள், நடிகைகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பஞ்சாபி, பெங்காலி ஆகிய மொழிகளைச் சேர்ந்த மாநிலங்களில் இருந்து எடுக்கப்பட்ட சர்வேயில் இந்திய அளவில் தென்னிந்தியாவை சேர்ந்த நடிகர்களே பிரபலமானவர்களாக உள்ளனர்.

அதன்படி, இந்தியாவில் நடிகர்களில் விஜய் முதலிடத்திலும், ஜூனியர் என்.டி.ஆர். இரண்டாம் இடத்திலும், அஜித் 6-வது இடத்திலும், சூர்யா 9-வது இடத்திலும் உள்ளனர். இந்தப் பட்டியலில் பாலிவுட்டில் இருந்து அக்ஷய்குமார் மட்டுமே இடம் பிடித்துள்ளார்.


இந்திய அளவில் நடிகைகளில் சமந்தா முதலிடத்திலும், ஆலியா பட் இரண்டாம் இடத்திலும், நயன்தாரா 3-ம் இடத்திலும் உள்ளனர். தீபிகா படுகோனே, கத்ரீனா கைஃப், ஆலியா பட் ஆகிய 3 பாலிவுட் நடிகைகள் இடம் பிடித்துள்ளனர்.


இதேபோல், சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான உள்ளூர் டி20 போட்டியான ஐபிஎல் டி20 போட்டியில் பிரபல அணிகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் வழக்கம்போல் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாமிடத்தில் பெங்களூரு அணியும், மூன்றாம் இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், இந்தாண்டு அறிமுகமான குஜராத் அணி 4-ம் இடத்திலும், கொல்கத்தா அணி 5-ம் இடத்திலும் இடம்பிடித்துள்ளன.

மே மாதம் 20-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை எடுக்கப்பட்ட சர்வேயில், ஐபிஎல் போட்டியில் மிகவும் அற்புதமான வீரர்களில் பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டன் விராத் கோலி முதலிடத்திலும், சென்னை அணியின் கேப்டன் தோனி 2-ம் இடத்திலும், ராஜஸ்தான் அணியின் ஜோஸ் பட்லர் 3-ம் இடத்திலும், தினேஷ் கார்த்திக் 6-ம் இடத்திலும் இடம் பிடித்துள்ளனர்.