இந்திய சீனியர் வீரர்கள் அனைவரும் இங்கிலாந்தில் டெஸ்ட் தொடருக்காக முகாமிட்டிருக்க, இலங்கைக்கு எதிராக ஜூலை 18-இல் தொடங்க இருக்கும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு ஷிகர் தவான் தலைமையிலான இளம் இந்திய வீரர்களை அனுப்பியிருக்கிறது பிசிசிஐ.
இங்கிலாந்துக்கு எதிரான தொடரை காட்டிலும் இலங்கை தொடர் எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கிறது. அதற்கு காரணம் இந்த இந்திய அணிக்கு பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டதுதான். ஏற்கெனவே இந்திய 19 வயதுக்குட்பட்டோருக்கான அணி, இந்திய ஏ அணி என பயிற்சியாளராக பல வைரங்களை சீனியர் அணிக்கு பட்டை தீட்டி அனுப்பியிருக்கிறார் டிராவிட்.
இலங்கை சென்று இருக்கும் இந்திய அணியில் இருக்கும் பல வீரர்கள் ஏற்கெனவே சில சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருந்தாலும், சிலர் இந்தத் தொடரில்தான் அறிமுகமாகியிருக்கிறார்கள். ஆனால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த வீரர்கள் அனைவரும் ஐபிஎல் தொடரின் மூலம் பரிச்சயமானவர்கள் என்பதால் சர்வதேச தளத்தில் இந்த இளம் வீரர்கள் எப்படி ஜொலிக்கப்போகிறார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்பை எகிறச் செய்திருக்கிறது. அதுபோல இந்தத் தொடரில் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கும் 5 இளம் பேட்ஸ்மேன்கள் குறித்து பார்க்கலாம்.
பிருத்வி ஷா
மும்பையை சேர்ந்த 22 வயதாகும் பிருத்வி ஷா 2018-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இந்தியாவுக்காக அறிமுகமானார். இந்தியாவுக்காக அறிமுகமான முதல் டெஸ்ட்டிலேயே சதமடித்தும் அசத்தினார் பிருத்வி ஷா. இதன் பின்பு ஊக்க மருந்து உட்கொண்டதன் பிரச்னை காரணமாக பிருத்வி ஷாவுக்கு ஓராண்டு விளையாட தடை விதிக்கப்பட்டு மீண்டும் 2020-ல் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடினார்.
பின்பு, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட்டில் மிக மோசமாக விளையாடியாதால் அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டார். ஆனால் பேட்டிங்கில் தன்னுடைய குறைகளை சரி செய்துக்கொண்ட பிருத்வி ஷா உள்ளூர் போட்டியான விஜய் ஹசாரேவில் விளாசு விளாசு என விளாசினார். பின்பு, ஐபிஎல் தொடரில் விஸ்வரூபம் எடுத்த அவர் அதன் பலனாக இப்போது மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். இனி, பிருத்வி ஷாவுக்கு இந்திய அணியில் நிரந்தர இடம் உண்டு என்பதை எதிர்பார்க்கலாம்.
தேவ்தத் படிக்கல்
கேரளாவைச் சேர்ந்த 21 வயதாகும் தேவ்தத் படிக்கல் 2020-ஐபிஎல் போட்டிகளில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக அறிமுகமானார். பெங்களூரு அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கி ஸ்டைல் மற்றும் அதிரடி என கலக்கினார். யுவராஜ் சிங் பேட்டிங் ஸ்டைலுடன் படிக்கல்லின் ஆட்டமும் ஒத்துப்போவதாக பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் அவரை தொடர்ந்து புகழ்ந்தனர்.
கேரளாவில் பிறந்தாலும் கர்நாடகாவுக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்திய 19 வயதுக்குட்பட்டோருக்கான அணி, இந்திய ஏ அணிக்காகவும் விளையாடி இருக்கிறார் தேவ்தத் படிக்கல். இதுவரை 39, டி20 போட்டிகளில் விளையாடியுள்ள தேவ்தத் படிக்கல் 1466 ரன்களை சேர்த்துள்ளார். அதில் மொத்தம் 2 சதங்களும் 11 அரை சதங்களும் அடங்கும். இந்த ரெக்கார்டுகள் காரணமாக இந்திய அணிக்கு ஜாக்பாட்டாக நுழைந்துள்ளார் தேவ்தத் படிக்கல்.
ருதுராஜ் கெய்க்வாட்
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 25 வயதாகும் ருதுராஜ் கெய்க்வாட் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தூணாக மாறிவிட்டார். 2020 ஐபிஎல் தொடரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். பின்பு அவருக்கு சிஎஸ்கேவில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. முதல் சில ஆட்டங்களில் சொதப்பிய ருதுராஜ் பின்பு தான் யார் என்பதை நிரூபித்தார்.
2021 ஐபிஎல் கோப்பையில் டூப்ளசிஸ், ருதுராஜ் ஜோடி அசத்தலான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. மிகவும் நிதானமாகவும், அதிரடியாகவும், முறையான கிரிக்கெட் ஷாட்டுகளை விளையாடக் கூடிய பேட்ஸ்மேன். டி20 போட்டிகளில் 1337 ரன்களும், முதல் தர போட்டிகளில் 2681 ரன்கள் என ருதுராஜின் ரெக்கார்டுகள் நின்று பேசும். இலங்கை தொடரில் டி20 போட்டி அல்லது ஒருநாள் போட்டி என எதில் ருதுராஜூக்கு வாய்ப்பு கிடைக்கும் என தெரியவில்லை, ஆனால் எதில் கிடைத்தாலும் நிச்சயம் பிரகாசிப்பார்.
நிதிஷ் ரானா
டெல்லியைச் சேர்ந்த 27 வயதாகும் நிதிஷ் ரானா, எப்போதோ இந்திய அணியில் இடம் கிடைத்திருக்க வேண்டிய ஒரு அற்புத பேட்ஸ்மேன். இடக்கை பேட்ஸ்மேனான அவர் ஐபிஎல் தொடரில் இப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் பட்டயை கிளப்பியிருக்கிறார்.
டி20 போட்டிகளில் மிகவும் அனுபவம் வாயந்தவர் நிதிஷ் ரானா. இதுவரை மொத்தம் 122 போட்டிகளில் விளையாடி 2846 ரன்கள்
எடுத்திருக்கிறார். அதில் மொத்தம் 21 அரைசதங்கள் அடங்கும். அதேபோல 58 முதல் தரப்போட்டிகளில் விளையாடியுள்ளார். நிதிஷ் ரானாவின் திறமைக்கு இப்போதுதான் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றாலும் அதை சிறப்பாகவே பயன்படுத்திக்கொள்வார் என நம்பலாம்.
இஷான் கிஷன்
பீகார் மாநிலைத்ச் சேர்ந்த 23 வயதான இஷான் கிஷன் ஒரு அதிரடியான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பல அதிரடி இன்னிங்ஸை விளையாடிய இஷான் கிஷனுக்கு இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி அரை சதமடித்த இஷானை பிசிசிஐ மறக்கவில்லை. தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இந்தாண்டு ஐபிஎல் போட்டியிலும் இஷான் கிஷன் அசத்தினார்.
தோனிக்கு பின் மாற்று விக்கெட் கீப்பராக இந்திய அணியில் சேர்க்க முயற்சிக்கப்பட்டார் இஷான். ஆனால் ரிஷப் பன்ட்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டதால் இந்திய அணியின் ஜெர்சியை அணியும் இஷானின் கனவு தள்ளிக்கொண்டே சென்று இப்போது நிஜமாகியிருக்கிறது. இலங்கைக்கு எதிரான தொடரில் இஷான் பேட்டிங், கீப்பிங் என இரண்டிலும் அசத்துவார் என எதிர்பார்க்கலாம்.