விளையாட்டு

பாராலிம்பிக் நிறைவு நிகழ்ச்சி: 2 பதக்கம் வென்ற அவனி லெகராவுக்கு கவுரவம்

JustinDurai
டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளின் நிறைவு நிகழ்ச்சியில் இந்திய அணிவகுப்பை 2 பதக்கம் வென்றவரான அவனி லெகரா தேசியக் கொடியை ஏந்திச் ஏந்தி செல்லும் கவுரவத்தை பெற்றுள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி தொடங்கிய மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் முடிவடைகிறது. இந்தியா சார்பில், இதுவரை இல்லாத அளவுக்கு தடகளம், வில்வித்தை, டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட 9 வகையான விளையாட்டுகளில், 54 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். பாராலிம்பிக்கில் 4 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 18 பதக்கங்களை இந்தியா கைப்பற்றியுள்ளது. தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டார்.
இந்த நிலையில் இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ள நிறைவு விழாவில் இந்திய அணிக்கு 2 பதக்கம் வென்றவரான இளம் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெகரா தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏந்தி செல்லும் கவுரவத்தை பெற்றுள்ளார். விழாவில் மொத்தம் 11 பேர் கொண்ட இந்திய குழுவினர் பங்கேற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராலிம்பிக் தொடக்க விழாவில் இந்திய அணியின் அணிவகுப்பின் போது தேசியக்கொடியை தேக் சந்த் ஏந்திச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.