இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில், விக்கெட்டுகள் முன்னதாகவே சரிந்தது தோல்விக்கு ஒரு காரணம் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி, அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி, நாட்டிங்காமில் நடந்தது. இதில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று நடந்தது.
டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் எடுத்து. அணியில் அதிகப்பட்சமாக ஜோ ரூட் 113 ரன்கள் குவித்திருந்தார். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, சாஹல் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 236 ரன்களுக்கே ஆல் அவுட் ஆனது. எனவே இங்கிலாந்து அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் அதிகப்பட்சமாக சுரேஷ் ரெய்னா 46 ரன்களும், விராட் கோலி 45 ரன்களும் எடுத்திருந்தனர். இதன்மூலம் 3 ஒருநாள் போட்டி கொண்ட கிரிக்கெட் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி 17-ந் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் போட்டிக்கு பின் பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, “ முதலில் எங்களுக்கு பேட்டிங் நன்றாக தான் சென்று கொண்டிருந்தது. ஆனால் எங்களுக்கு விக்கெட்டுகளும் முன்னதாக சரிய தொடங்கிவிட்டன. இது இந்திய அணிக்கு ஒரு பின்னடைவுதான். விக்கெட்டுகள் முன்னதாவே வீழும் போது மீண்டும் வருவது கொஞ்சம் கஷ்டம்தான். சித்தார்த் புதிதாக பங்கேற்றுள்ளார். அதேபோல உமேஷ் பல நாட்களுக்கு பின் பங்கேற்கிறார். நாங்கள் இதுநாள் வரை சிறப்பாகத்தான் ஆடிக்கொண்டிருந்தோம். இன்று எங்களுக்கு மோசமான நாள். இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் எங்களுக்கு நெருக்கடியை கொடுத்தனர். முன்னதாகவே விக்கெட்டுகள் விழாமல் இருந்திருந்தால் எங்களாலும் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டிருக்க முடியும்” என்றார்.