டாப் 10 ஸ்போர்ட்ஸ் PT
விளையாட்டு

Top 10 Sports | 18 வயதில் உலக செஸ் சாம்பியனான குகேஷ் To தோனியின் கேப்டன்சியை பறித்த LSG ஓனர்!

இன்றைய நாளில் விளையாட்டில் நடந்த டாப் 10 ஸ்போர்ட்ஸ் செய்திகளை பார்க்கலாம்..

Rishan Vengai

18 வயதில் உலக சாம்பியன் - குகேஷ்

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டரான குகேஷ், நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை 14வது சுற்றில் வீழ்த்தி இளம் வயதில் உலக செஸ் சாம்பியான் ஆன முதல் வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்தார்.

தாமதமாக வந்த ஜெய்ஸ்வாலை விட்டுச்சென்ற இந்திய அணி

இந்திய அணி அடிலெய்டில் இருந்து விமானம் மூலம் பிரிஸ்பேனுக்கு புறப்பட்டு சென்றது. அப்போது அடிலெய்டில் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து பஸ் மூலம் விமான நிலையம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

jaiswal

காலை 10 மணியளவில் விமானம் புறப்படும் என்பதால், இந்திய அணியினர் அனைவரும் 8.30 மணிக்கே ஓட்டலில் இருந்து பஸ்சில் ஏறினர். ஆனால் இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் சரியான நேரத்திற்கு வராததால் ரோகித் சர்மா கோபமடைந்தார்.

பின்னர் அவரை விட்டுவிட்டு மற்ற வீரர்கள் அனைவரும் விமானம் புறப்பட்டு சென்றனர். சிறுது நேரத்திற்கு பிறகு தனி காரை பிடித்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் விமானத்திற்கு சென்றுள்ளார்.

புரோ கபடி: தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்திய தபாங் டெல்லி!

11-வது புரோ கபடி லீக் தொடரின் முதலிரண்டு கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத் மற்றும் நொய்டாவில் நடைபெற்ற நிலையில், 3-ம் கட்ட லீக் ஆட்டங்கள் புனேவில் நடைபெற்று வருகிறது.

புரோ கபடி

இந்நிலையில் தெலுங்கு டைட்டன்ஸ் மற்றும் தபாங் டெல்லி இடையிலான போட்டியில் 33-27 என்ற புள்ளிக்கணக்கில் தபாங் டெல்லி அபார வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணியுடன் இணைய மறுத்த பயிற்சியாளர் கில்லஸ்பி..

பாகிஸ்தானின் புதிய டெஸ்ட் பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளர் கில்லஸ்பி நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் வென்றது.

கில்லஸ்பி

இந்நிலையில் தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட பாகிஸ்தான் தென்னாப்பிரிக்காவுக்கு சென்றுள்ளது. ஆனால் பாகிஸ்தான் அணியுடன் கில்லஸ்பி இணையவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. கில்லஸ்பியின் துணை பயிற்சியாளர் டிம் நீல்சனின் பதவிக் காலத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு நீடிக்காததால் அவரும் பதவியில் இருந்து விலகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

பெண்கள் ஜூனியர் ஹாக்கி: சீனாவிடம் தோற்ற இந்தியா

பெண்கள் ஜூனியர் ஹாக்கி

21 வயதுக்குட்பட்டோருக்கான ஒன்பதாவது பெண்கள் ஜுனியர் ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டியானது மஸ்கட்டில் நடந்துவருகிறது. இதில் A பிரிவில் இடம்பெற்றுள்ள நடப்பு சாம்பியன் அணியான இந்தியா, 3வது லீக் போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் சீனாவிடம் தோல்வியை சந்தித்தது.

உலக சாதனை படைத்த ஸ்மிரிதி மந்தனா

ஸ்மிரிதி மந்தனா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் சதமடித்த ஸ்மிரிதி மந்தனா, ஒரு காலண்டர் ஆண்டில் அதிக ஒருநாள் சதங்கள் (4) அடித்த முதல் வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

மகனுக்காக மருத்துவ பணியை விட்ட தந்தை

இளம் வயதில் உலக செஸ் சாம்பியனாக மாறி இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார் சென்னையை சேர்ந்த 18 வயதேயான குகேஷ். அவருக்கு உலகமே பாராட்டு மழையை பொழிந்து கொண்டிருக்கும் வேளையில், தன்னுடைய வெற்றிக்கு பிறகு தந்தையை குகேஷ் கட்டிப்பிடித்து அழுகும் கணொளி டிரெண்டாகி வருகிறது.

தன்னுடைய மகன் அவனுடைய செஸ் கேரியரில் சிறந்து விளங்க வேண்டும், அவனை எந்த நாட்டில் சாம்பியன் போட்டி நடந்தாலும் அழைத்துசெல்ல வேண்டும் என்பதற்காகவே தன்னுடைய மருத்துவ பணியை அவருடைய தந்தையான ரஜினிகாந்த் கைவிட்டுள்ளார். இந்த செய்தி வைரலாக பேசப்பட்டு வருகிறது.

3 தோல்விக்கு பிறகு முதல் வெற்றி..

ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் தொடர்ச்சியான மூன்று தோல்விக்கு பிறகு சென்னை எப்சி அணி வெற்றிப்பாதைக்கு திரும்பியது.

சென்னை எஃப்சி

ஐதாராபாத் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 1-0 என வெற்றிபெற்றதையடுத்து வெற்றிப்பாதைக்கு திரும்பி உள்ளது சென்னை எஃப்சி அணி.

தோனி உடனான மோதல் குறித்து பேசிய LSG ஓனர்..

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 ஆண்டுகள் தடைசெய்யப்பட்ட போது ரைஸிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக தோனி செயல்பட்டார். ஆனால் சில தொடர் தோல்விக்கு பிறகு தோனியை விட ஸ்டீவன் ஸ்மித் சிறந்த கேப்டன் என்று அவ்வணியின் ஓனர் சஞ்சீவ் கோயங்கா (தற்போதைய LSG அணி ஓனர்) தெரிவித்தார். மேலும் கேப்டன் பதவியிலிருந்து தோனி விலக்கப்பட்டு ஸ்மித் கேப்டன்சியை கையிலெடுத்தார்.

தோனி

இந்நிலையில் அப்போதைய சர்ச்சை குறித்து பேசியிருக்கும் கோயங்கா, அந்த சம்பவம் குறித்து தோனி இதற்கு முன்பும் சரி, தற்போதுவரை எதுவுமே பேசியதில்லை. அது இரண்டு நபர்களுக்கிடையே எடுக்கப்பட்ட முடிவு, இன்றுவரை எங்களுக்குள் நல்ல உறவு இருக்கிறது என்று கூறியுள்ளார்.

ரோகித் சர்மாவை விமர்சித்த தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர்

ரோகித் சர்மா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மோசமாக அவுட்டான ரோகித் சர்மாவை விமர்சித்திருக்கும் தென்னாப்பிரிக்கா முன்னாள் வீரர் டேரில் கலினன், வெளிநாட்டு மண்களில் எப்போதுமே ரோகித் சர்மா சொதப்பக்கூடியவர், அவரிடம் இந்தியாவில் இருப்பதை போல தட்டையான ஆடுகளங்களை காட்டுங்கள் நன்றாக ரன்களை அடிப்பார் என்று விமர்சித்துள்ளார்.