விளையாட்டு

டி.என்.பி.எல் கிரிக்கெட்: 2 வது முறையாக சாம்பியன் ஆனது சூப்பர் கில்லீஸ்!

webteam

தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி-20 கிரிக்கெட் தொ‌டரில் சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சாம்பியன் ‌பட்டம் வென்றது. இறுதிப்போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை சென்னை அணி தோற்கடித்தது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்கள் பெரியளவில் ரன்களைச் சேர்க்க தவறிய நிலையில் மத்தி‌ய வரிசை வீரர்கள் நிதானமாக ரன்களைச் சேர்த்தனர். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களைச் சேர்த்தது. 

127 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி மளமளவென முதல் 3 விக்கெட்டுகளை இழந்தது. மத்திய வரிசை வீரர்கள் நிதானமாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். இருப்பினும் அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 114 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதையடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சென்னை அணி இரண்டாவது முறையாக கோப்பையையும் கைப்பற்றியது. 

சி‌றப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சென்னை அணியின் பெரியசாமிக்கு ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.