இந்திய கிரிக்கெட் வீரரும், தமிழகத்தை சேர்ந்தவருமான தங்கராசு நடராஜன் விஜய் ஹசாரே கோப்பைக்கான தமிழக அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக அவர் கடந்த 3-ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த தமிழக அணியில் இடம் பிடித்து இருந்தார். வரும் பிப்ரவரி 20 தொடங்கி மார்ச் 14 வரையில் இந்தத் தொடர் நடக்க உள்ளது. அதேநேரத்தில் இங்கிலாந்து அணியும் மார்ச் 12 முதல் மார்ச் 28 வரையிலான தேதிகளில் 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த சூழலில்தான் நடராஜன் தமிழக அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
நடராஜன் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டது ஏன்? என தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் எஸ்.ராமசாமி தெரிவித்துள்ளார்.
“இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் அணி நிர்வாகத்திற்கு நடராஜன் தேவைப்படுகிறார். தேசிய நலனுக்காக விளையாடுவது தான் ஒவ்வொரு வீரனுக்கும் முதல் கடமை. அதன் அடிப்படையில் நடராஜன் விடுவிக்கப்பட்டுள்ளார். விரைவில் தமிழக அணியில் அவருக்கான மாற்று வீரர் இடம் பிடிப்பார்” என அவர் தெரிவித்துள்ளார்.
இதையெல்லாம் வைத்து பார்த்தால் நடராஜன் இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான அணியில் இடம்பிடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே எதிர்பார்க்கப்படுகிறது.