madurai divya pt web
விளையாட்டு

துப்பாக்கி சுடுதல் | தேசிய அளவில் இரட்டைத் தங்கம்.. நாட்டை திரும்பிப் பார்க்க வைத்த மதுரை மாணவி!!

மதுரை கோச்சடை பகுதியைச் சேர்ந்த வீராங்கனை திவ்யா, அபாரமான திறமையை வெளிப்படுத்தி தங்கப் பதக்கம் வென்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

PT WEB

முதலிடம் பிடித்த திவ்யா 

மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள பள்ளி விளையாட்டு கூட்டமைப்பின் கீழ் 69வது தேசியப் பள்ளி விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் (2025–26) ஆண்டுக்கான போட்டிகள் சிறப்பாக நிறைவடைந்துள்ளன. இதில் 17 வயதுக்குட்பட்டோருக்கான ஓப்பன் சைட் ஏர் ரைஃபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்ற மதுரை கோச்சடை பகுதியைச் சேர்ந்த வீராங்கனை திவ்யா, அபாரமான திறமையை வெளிப்படுத்தி தங்கப் பதக்கம் வென்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். இந்த இறுதிப் போட்டியில் நாடு முழுவதிலிருந்து 70 வீராங்கனைகள் பங்கேற்ற நிலையில், திவ்யா மொத்தம் 352.00 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார்.

shooter divya

திவ்யா பங்கேற்ற நான்கு சுற்றுகளில்  87.00, 92.00, 86.00 மற்றும் 87.00 புள்ளிகளைப் பெற்று, போட்டியின் தொடக்கம் முதல் முடிவு வரை முன்னணியில் நீடித்தார். குறிப்பாக இரண்டாம் சுற்றில் பெற்ற 92 புள்ளிகள் அவரது நிலைத்தன்மையும், மன உறுதியையும் வெளிப்படுத்தியதாக விளையாட்டு நிபுணர்கள் பாராட்டினர். மேலும் தனிநபர் போட்டியில் மட்டுமல்லாமல், மூன்று வீராங்கனைகள் இணைந்து விளையாடிய குழு போட்டியிலும் தங்கப் பதக்கம் பெற்றுள்ளார். திவ்யா இந்தப் போட்டியில் இரட்டை தங்கப் பதக்கம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

திவ்யாவின் பயணக் கதை: ஒலிம்பிக் கனவு – நிதி உதவி வேண்டுகோள்

இந்த வெற்றியைத் தொடர்ந்து தனது விளையாட்டு பயணம் குறித்து புதிய தலைமுறையிடம் பேசிய திவ்யா, "எட்டாம் வகுப்பு முடிந்து விடுமுறையில் இருந்தபோது, என் தந்தை கண்ணன் என்னை ஏதாவது விளையாட்டில்  ஈடுபடுத்த வேண்டும் என முடிவு எடுத்தார். அதனால் முதலில் நீச்சல் பயிற்சிக்கு அனுப்பினார். அதன் பிறகு துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியில் என்னை சேர்த்தார். சுமார் ஆறு மாதங்களில் முழுமையான பயிற்சி பெற்ற நான், இன்று தேசிய அளவில் தங்கம் வென்றிருக்கிறேன்" என்றார். மேலும், தனது வெற்றிக்குப் பின்னால் உள்ள முக்கிய விஷயங்களை குறிப்பிடும் போது, என் பயிற்சியாளர் வேல் சங்கர் மிகவும் நுட்பமாக நான் செய்யும் தவறுகளை கண்டறிந்து திருத்தினார். அவரது வழிகாட்டுதல் இல்லையெனில் இந்த வெற்றி சாத்தியமாகியிருக்காது என கூறினார்.

divya

எதிர்கால இலக்குகள் குறித்து வீராங்கனை திவ்யா கூறுகையில், "இனிவரும் காலங்களில் இந்த விளையாட்டில் தொடர்ந்து முன்னேறி, இந்தியாவிற்காக விளையாட வேண்டும் என்பது என் கனவு. மேலும்  ஒலிம்பிக்கில் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும். ஆனால் அதற்காக பயன்படுத்த வேண்டிய துப்பாக்கி பல லட்ச ரூபாய் மதிப்புடையது. எனது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு நிதி உதவி கிடைத்தால், நிச்சயமாக ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கம் வென்று தருவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது" என திவ்யா தெரிவித்தார்.