தோனியின் பிறந்த நாளுக்கு இன்னும் 100 நாட்கள்தான் இருக்கிறது என அவரது ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்டாக்கியுள்ளனர்.
1981ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி ராஞ்சியில் பிறந்தவர் மகேந்திர சிங் தோனி. 2005ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆன தோனி, பின்னர் படிப்படியாக உயர்ந்து இந்தியாவின் கேப்டன் ஆனார். அதுமட்டுமின்றி இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் உச்சப்பட்ச நாயகனாகவும் தோனி வந்துகொண்டிருக்கிறார். இந்திய கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் ஆட்டத்தை பார்க்க எப்படி தனி ரசிகர் கூட்டம் இருந்ததோ, அதேபோல தோனியின் ஆட்டத்தை பார்க்கவும் ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. தோனி களத்தில் இறங்கினாலே விசில் சத்தத்தை காது கிழியக் கேட்க வைத்துவிடும் அந்தக் கூட்டம்.
குறிப்பாக தோனிக்கு சென்னையில் (தமிழகம்) அதிக ரசிகர்கள் உண்டு. அதற்கு காரணம் ஐபிஎல். சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் கேப்டனாக விளையாடிய தோனி, அணிக்கு கோப்பையையும் பெற்றுக்கொடுத்தார். இதனால் அவரை சென்னை ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியதும் இல்லமால், தல என்றே தோனிக்கு செல்லப்பெயரும் வைத்துவிட்டனர். ஐபிஎல் போட்டிகளில் ஆண்டுதோறும் அடித்து நொறுக்கி வந்த சென்னை அணி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சர்ச்சையில் சிக்கியது. அதனால் இரண்டு ஆண்டுகள் சென்னை அணிக்கு தடையும் விதிக்கப்பட்டது.
இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தோனி புனே அணிக்கு விளையாடி வந்தார். தடை முடிந்து இந்தாண்டு முதல் சென்னை அணி மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடவுள்ளதால், தற்போது சென்னை ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்து வருகின்றனர். அதன் எதிரொலியாய் சென்னை அணியைப் பற்றியோ, தோனியைப் பற்றியோ எந்த ஒரு சிறு செய்தியாக இருந்தாலும் அதை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி, ட்ரெண்ட்டில் வர வைத்து விடுகின்றனர். அதன்படி தான் தற்போது தோனியின் பிறந்த நாளுக்கு இன்னும் 100 நாட்கள் உள்ளது என்பதை ட்விட்டரில் அவரது ரசிகர் பட்டாளம் ட்ரெண்டாக்கியுள்ளனர்.