விளையாட்டு

இது தான் எனது கடைசி உலககோப்பை ; கால்பந்து ரசிகர்களை கலங்கடித்த ”மெஸ்ஸி”யின் அறிவிப்பு

Rishan Vengai

கத்தாரில் நடைபெறவிருக்கும் ஃபிஃபா உலககோப்பை தான் தனக்கு கடைசி உலககோப்பையாக இருக்கும் என்று உறுதிபடுத்தியுள்ளார் அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி. மெஸ்ஸியின் இந்த அறிவிப்பு கால்பந்து ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எந்த கால்பந்து ரசிகரும் கேட்க விரும்பாத செய்தியை அர்ஜென்டினா கேப்டனும் நட்சத்திர வீரருமான லியோனல் மெஸ்ஸி நேற்று உறுதிப்படுத்தியுள்ளார். "இது எனது கடைசி உலகக் கோப்பை என்றால்? ஆம் நிச்சயமாக, ஆம்" என்று மெஸ்ஸி Star+ உடன் நடந்த உரையாடலில் கூறியுள்ளார்.

அர்ஜென்டினா பத்திரிகையாளர் செபாஸ்டியன் விக்னோலோ உடனான உரையாடலில் பேசியிருக்கும் அவர், "நான் உடல் ரீதியாக நன்றாக உணர்கிறேன், முந்தைய வருடம் நான் செய்யாத ஒரு சிறந்த சீசனாக இந்த வருட உலககோப்பை இருக்கும். இதுவரை எல்லாம் நன்றாக சென்றது, நான் தாமதமாகவே பயிற்சி செய்ய ஆரம்பித்தேன், அதனால் ரிதமின்றி விளையாடிய நிலையில் தேசிய அணிக்கு திரும்பி வந்தபோது எனக்கு காயம் ஏற்பட்டது, நான் போட்டியில் பங்கேற்கவில்லை. தற்போது நான் உலகக் கோப்பைக்கான நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன்.

உண்மை என்னவென்றால், ” சிறு கவலையுடன் நெர்வஸ்ஸாக இருக்கிறேன், நாங்கள் இங்கே இருக்கிறோம், இது கடைசி உலககோப்பையான ஒன்று, என்ன நடக்கப் போகிறது, எப்படி இருக்க போகிறது என்று தெரியவில்லை. தற்போது உலககோப்பை வரவிருக்கிறது, அது வரும் வரை எங்களால் காத்திருக்க முடியாது, மறுபுறம் அது நன்றாகப் போக வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

FIFA உலகக் கோப்பை அரங்கில் மெஸ்ஸி அவர் வைத்திருக்கும் மிக உயர்ந்த தரத்திற்கு ஏற்ப ஆடியதில்லை. அர்ஜென்டினா நட்சத்திர வீரரான மெஸ்ஸி, உலகக் கோப்பையில் 19 போட்டிகளில் ஆறு கோல்களை மட்டுமே அடித்துள்ளார், நான்கு உலககோப்பை சீசன்களான (2006, 2010, 2014 மற்றும் 2018) உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் மெஸ்ஸியின் ஸ்கோரிங் வீதம் ஒரு ஆட்டத்திற்கு வெறும் 0.32 கோல்கள் மட்டுமே என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. பலருக்கு இது ஈர்க்கக்கூடிய எண்ணிக்கையாக இருந்தாலும், அர்ஜென்டினாவுடனான சர்வதேச பயணங்களில் அவர் பெற்ற ஒரு ஆட்டத்திற்கு 0.53 கோல்களை விட இது மிகவும் குறைவு.

உலகக் கோப்பை மெஸ்ஸியைத் தவற விட்டுவிட்டது. ஒவ்வொரு நான்கு வருடங்களுக்குமான உலககோப்பையில், அவர் இறுதிப் போட்டியை நெருங்குவதற்கு கடினமாக உழைத்த போதிலும், அதை வெல்வதில் தோல்வியே சந்தித்துள்ளார் மெஸ்ஸி. பல ஆப்சன்கள் இல்லாத ஒரு சாதாரன அணியாக இருந்த போதிலும், உலகின் பெரும்பாலான அணிகள் எதிர்பார்க்காத போது, அர்ஜென்டினா அணியை மெஸ்ஸி 2014 உலகக் கோப்பையில் இறுதி போட்டிவரை அழைத்து வந்தார், ஆனால் அர்ஜெண்டினா இறுதிப் போட்டியில் ஜெர்மனியிடம் தோல்வியுற்றது.

அர்ஜென்டினா தனது 2022ஆம் ஆண்டுக்கான ஃபிஃபா உலகக் கோப்பைக்கான முதல் யுத்தத்தை நவம்பர் 22 அன்று சவுதி அரேபியாவுக்கு எதிராக தொடங்குகிறது.