சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி இருவருக்கும் முக்கியமான நாள் இன்று.
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர், 2010ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக குவாலியரில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் விளாசினார். ஒருநாள் கிரிக்கெட் உலகில் அடிக்கப்பட்ட முதல் இரட்டை சதம் இதுதான். 147 பந்துகளில் 200 ரன்கள் எடுத்தார். இதில் 25 பவுண்டர்களாகும், 3 சிக்ஸர்களும் அடங்கும். அதற்கு முன்பு வரை பாகிஸ்தான் வீரர் சயது அன்வர் அடித்த 194 ரன்கள்தான் சாதனையாக இருந்தது. அன்வரி சாதனையை முறியடித்து, முதல் வீரராக இரட்டை சதம் அடித்து சச்சின் புதிய சாதனைப் படைத்தார்.
அதேபோல், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, இதேநாளில் 2013ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தோனி, 265 பந்துகளில் 224 ரன்கள் எடுத்தார். 24 பவுண்டரிகளும், 6 சிக்ஸர்களும் அடித்தார்.
சச்சின், தோனிக்கு மட்டுமல்ல வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயிலுக்கும் இன்று முக்கியமான நாள். உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதல் வீரராக கெயில் இரட்டைச் சதம் அடித்தார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான அந்தப் போட்டியில் கெயில் 215 ரன்கள் அடித்தார்.