இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ரவி சாஸ்திரியை நீக்க வேண்டிய அவசியமில்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஏபிபி செய்தி நிறுவனத்துக்கு பேசிய அவர் "முதலில் இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர் முடியட்டும். அப்போதுதான் நம்முடைய புதிய அணி எப்படி இருக்கிறது என்பது தெரியும். இப்போது ஒரு புதிய பயிற்சியாளரை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறீர்கள் என்றால் அது தவறல்ல. அதேவேளையில் ரவி சாஸ்திரி தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டால் அவரை நீக்க வேண்டிய அவசியமும் இல்லை. இதற்கெல்லாம் காலம்தான் பதில் சொல்லும். அதற்கு முன்பாக தெரிவிக்கப்படும் கருத்துகள் அணியின் கேப்டனுக்கும், பயிற்சியாளருக்கும் அழுத்தத்தை கொடுக்கும்" என்றார்.
மேலும் பேசிய அவர் "இந்திய அணிக்கு நிறைய திறமையானவர்கள் இருக்கிறார்கள். ஒருவர் போனால் அவரின் இடத்தை நிரப்புவதற்கான வீரர்கள் இருக்கிறார்கள். அது நமக்கான பலம். இப்போது இருக்கும் இரு அணிகளும் சிறப்பாக விளையாடினால் நம்மால் இங்கிலாந்து மற்றும் இலங்கையில் வெற்றிவாகை சூட முடியும். இரண்டு அணிகளை அனுப்புவதன் மூலம் ஏராளமான இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அதேநேரத்தில் வீரர்களுக்கு எவ்வித அழுத்தமும் இருக்ககக் கூடாது" என்றார் கபில் தேவ்.
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு கேப்டனாக விராட் கோலியும், பயிற்சியாளராக ரவி சாஸ்திரியும் இருக்கின்றனர். அதேவேளையில் இலங்கையில் 3 ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாட இருக்கும் இந்திய அணிக்கு கேப்டனாக ஷிகர் தவானும், பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.