கொல்கத்தா அணியின் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல், சாத்தியமே இல்லாத வெற்றிகளை தனது அதிரடி ஆட்டத்தால் சாத்தியமாக்குகிறார்.
ஐ.பி.எல் தொடரில் சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த இரு அணிகளும் கடைசியாக நடைபெற்ற போட்டியில் அபாரமாக ஆடி வெற்றிப் பெற்றன. இரு அணிகளுமே தலா 4 வெற்றி, 1 தோல்வியுடன் சிறப்பான மற்ற அணிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ்கின்றன.
சென்னை அணியைப் பொறுத்தவரை தோனி, கேதர் ஜாதவ் உள்ளிட்டோர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். பந்துவீச்சில் இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிங், சாஹர் உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். தனியொருவரை சார்ந்து இல்லாமல் பெரும்பாலும் கூட்டு முயற்சியிலே சிஎஸ்கே வெற்றி பெற்று வருகிறது.
அதேபோல், கொல்கத்தா அணியில் சுனில் நரைன், கிறிஸ் லின், தினேஷ் கார்த்திக் உள்ளிட்டோர் சிறப்பாக பேட்டிங் செய்து வருகின்றனர். இருப்பினும், அந்த அணியின் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல், சாத்தியமே இல்லாத வெற்றிகளை தனது அதிரடி ஆட்டத்தால் சாத்தியமாக்குகிறார். எதிரணியிடமிருந்து வெற்றிகளை பறித்துவிடுகிறார்.
இந்த ஐபிஎல் ரஸ்ஸலின் ஆட்டமே அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 207 ரன்கள் குவித்துள்ளார். இத்தனைக்கு ரஸ்ஸல் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்தான். 5வது, 6வது, சில நேரங்களில் 7வது வீரராக களமிறங்கியே இத்தனை ரன்கள் எடுத்துள்ளார். அதிலும் கடைசியாக நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவர் களமிறங்கவே இல்லை. ரஸ்ஸல் அடித்துள்ள ரன்களில் பெரும்பாலானவை கொல்கத்தா அணியின் வெற்றியை தீர்மானிப்பவையாக இருந்துள்ளது.
முதல் போட்டியிலே வலுவான ஹைதராபாத் அணியுடன் கொல்கத்தா மோதியது. அந்தப் போட்டியில் ஹைதராபாத் 181 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் விளையாடிய கொல்கத்தா அணி ஒருகட்டத்தில் 15.3 ஓவர்களில் 118 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்த 27 பந்துகளில் 69 ரன்கள் தேவையாக இருந்தது. அதாவது ஓவருக்கு 15 ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டியிருந்தது. ஆனால், இரண்டு பந்துகள் மீதமிருந்த நிலையிலே கொல்கத்தா அணி வெற்றி வாகை சூடியது. அதற்கு காரணம், 19 பந்துகளில் ரஸ்ஸல் 49 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்ததுதான். 4 சிக்ஸர், 4 பவுண்டரி அடித்து இருந்தார்.
அதேபோல், டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி சூப்பர் ஓவரில் தோல்வி அடைந்தது. இருப்பினும் அந்தப் போட்டியில் ரஸ்ஸல் 28 பந்துகளில் 62 ரன்கள் குவித்திருந்தார். 7வது வீரராக களமிறங்கியே 6 சிக்ஸர், 4 பவுண்டரி விளாசி இருந்தார். கடைசியாக ரஸ்ஸல் மிரட்டியது பெங்களூர் அணிக்கு எதிரானது. 205 ரன்கள் குவித்து முதல் வெற்றியை சுவைத்துவிடலாம் என்ற பெங்களூர் அணியின் கனவை ரஸ்ஸல் தன்னுடைய சிக்ஸர் மழையால் கலைத்துவிட்டார். கடைசி மூன்று ஓவரில் 53 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 13 பந்துகளில் 48 ரன்களை விளாசி கொல்கத்தாவுக்கு வெற்றியை தேடித் தந்தார்.
இந்நிலையில், சென்னை அணியின் வெற்றிக்கு ரஸ்ஸல் நிச்சயம் சவாலாகவே இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டுகிறது. அதனால், ரஸ்ஸல் விக்கெட்டை வீழ்த்துவதற்கு சிஎஸ்கே கேப்டன் தோனி புதிய வியூகம் வகுப்பார் என்று தெரிகிறது. ரஸ்ஸலை வீழ்த்தும் ஆயுதமாக இம்ரான் தாஹிர் இருப்பார் என்றே தெரிகிறது.
அதேபோல், ஹர்பஜன், ஜடேஜா, தாஹிர் ஆகிய மூவரில் யாரேனும் ஒரு சுழற்பந்துவீச்சாளரை வைத்து தோனி வியூகம் வகுக்க வாய்ப்புள்ளது. பின் கள வரிசையில் ரஸ்ஸல் களமிறங்குவதில், அதற்குள் முழு போட்டியினையும் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டால் இறுதியில் நெருக்கடியை கொடுக்கவும் வாய்ப்புள்ளது.
இதுகுறித்து சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் கூறுகையில், “கொல்கத்தா அணியில் லின், தினேஷ் கார்த்திக், நரைன் உள்ளிட்ட சிறப்பான பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அதனால், ரஸ்ஸல் மீது மட்டும் கவனம் செலுத்த போவதில்லை” என்றார்.