இந்த ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 19.4 ஓவர்களில் 153 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் கருண் நாயர் 54 ரன்கள் எடுத்தார். சென்னை தரப்பில் 4 ஓவர்களில் வெறும் 10 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டை வீழ்த்தினார் நிகிடி. ஷர்துல் தாகூர், பிராவோ, தலா இரண்டு விக்கெட்டுகளை வீத்தினர்.
பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 19.1 ஓவரில் 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சுரேஷ் ரெய்னா 48 பந்தில் 61 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆட்ட நாயகன் விருது லுங்கி நிகிடிக்கு வழங்கப்பட்டது.
போட்டிக்குப் பின் பேசிய தோனி கூறும்போது, ‘பஞ்சாப் பந்துவீச்சாளர் அங்கித், பந்தை நன்றாக ஸ்விங் செய்தார். அவர் பந்து கொஞ்சம் அதிகமாகவே ஸ்விங் ஆனது. கேப்டனின் பார்வையில் அதிகமான விக்கெட் எடுக்க வேண்டும். அதனால் குழப்பத்தை ஏற்படுத்த ஹர்பஜன் சிங், தீபக் சாஹரை எனக்கு முன்பாக பேட்டிங் செய்ய களமிறக்கினேன். பந்துவீச்சாளர்கள் உடனடியாக யார்க்கராகவும் பவுன்சராகவும் வீசத் தொடங்கிவிட்டார்கள். அதோடு அவர்களுக்கு எதிராக சரியான லைனிலும் லென்த்திலும் பந்துவீசுவதை விட்டுவிட்டார்கள். இதனால் அவர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள்.
எங்கள் வீரர்களுக்கு நெருக்கமான சிலர் இருக்கிறார்கள். அவர்கள் கேப்டனுக்கான வேலையை எளிமைப்படுத்தி விடுகிறார்கள். அதோடு எங்கள் அணி சிறப்பானது. சிறப்பான அணி இல்லையென்றால் கடினம். ஐபிஎல்-லின் முதல் தொடரில் இருந்து பல வீரர்களை சேர்த்துக் கொண்டிருக்கிறோம். அஸ்வின், போலிங்கர், மோகித் உட்பட பலரும் சிறப்பாக எங்கள் அணியில் விளையாடி இருக்கிறார்கள். இரண்டு வருடத்துக்கு பின் திரும்பி வரும்போது பெரும்பாலான வீரர்கள் எங்களிடம் இருந்து சென்றுவிட்டார்கள்.
கடந்த 10 வருடத்தை திரும்பிப் பார்த்தால் எங்களுக்கு சிறப்பானதாகவே அமைந்திருக்கிறது. சில பைனலில் என்ன தவறு நடந்தது என்பதை இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன். டி20 போட்டி அப்படித்தான். ஒரு சில சிக்சரோ, பவுண்டரியோ அல்லது ரன் அவுட்டோ போட்டியை மாற்றிவிடும். எல்லோரும் வெற்றி பெற வேண்டும் என்றே நினைக்கிறார்கள். நாக் அவுட் போட்டிகளில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். முதல் இரண்டு இடத்தைப் பிடித்த அணிகளுக்கு எக்ஸ்ட்ரா லைஃப் கிடைத்திருக்கிறது’ என்றார்.