விளையாட்டு

வெற்றியை கணிக்க முடியாது: ரோகித் சர்மா

வெற்றியை கணிக்க முடியாது: ரோகித் சர்மா

webteam

டி20 போட்டிகளில் வெற்றியை கணிப்பது கடினம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் டி20 கிரிக்கெட் போட்டி இன்று முதல் 18 ஆம் தேதி வரை இலங்கையில் நடக்கிறது. இன்று நடக்கும் முதல் போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதுகின்றன. 8-ஆம் தேதி இந்தியா- பங்களாதேஷ், 10 ஆம் தேதி இலங்கை- பங்களாதேஷ், 12 ஆம் தேதி இந்தியா-இலங்கை, 14 ஆம் தேதி இந்தியா-பங்களாதேஷ், 16 ஆம் தேதி இலங்கை-பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன. 18 ஆம் தேதி இறுதிப்போட்டி நடக்கிறது.

இது தொடர்பாக கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்த, இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:
இந்திய அணியில் முன்னணி வீரர்கள் இல்லை என்றாலும் புதிதாக இணைந்திருக்கிற இளம் வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன். அவர்கள் உள்ளூர் முதல் தர போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார்கள். அவர்களின் பலத்தை பரிசோதிக்க இந்த தொடர் உதவும். இலங்கை போட்டி தொடரில் வெற்றி வாய்ப்பு பற்றி கேட்கிறார்கள். குறுகிய ஓவர் போட்டியில் எதுவும் நடக்கும். ஒரே ஓவரில் நிலைமை மாறிவிடும் வாய்ப்பும் இருக்கிறது. அதனால் இதை கணித்துச் சொல்வது கஷ்டம். எதிர் அணிகளையும் குறைத்து மதிப்பிடவில்லை. அவர்கள் பலமான அணியை கொண்டிருக்கிறார்கள். குறிப்பிட்ட நாளில் சிறப்பாக செயல்படும் அணி வெற்றி பெறும். அணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்ததை அதிர்ஷ்டமாக கருதுகிறேன்’ என்று தெரிவித்தார்.