விளையாட்டு

சேலத்தின் மலைக்கிராமம் to பாராலிம்பிக்.. பதக்க நாயகன் மாரியப்பனின் வெற்றிக் கதை!

EllusamyKarthik

பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பதக்கம் வென்று மலைக்க வைக்கும் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன். ஒரு குக்கிராமத்தில் பிறந்து, பாராலிம்பிக் வரலாற்று புத்தகத்தில் தனக்கென்று தனி முத்திரை பதித்துள்ள மாரியப்பன் குறித்து பார்க்கலாம்.

ஒருகாலத்தில் பேருந்து வசதி கூட இல்லாத மலைக்கிராமமாக இருந்தது சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியவடகம்பட்டி. இந்த கிராமத்தில் இருந்து புறப்பட்டது மாரியப்பன் எனும் தடகளப் புயல். மதுபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநரால் சிறுவயதில் தமது காலில் பாதிப்பை சந்தித்தார் மாரியப்பன். தத்தி தத்தி நடந்து செல்லும் பாதிப்பு ஒருபுறம், தந்தை தங்கவேலு குடும்பத்தை பிரிந்து சென்று விட்ட நிலையில் கூலி வேலை செய்தும், காய்கறி விற்றும் தம்மை வளர்க்கும் தாய் சரோஜா மறுபுறம். ஆனாலும் மாரியப்பனின் விளையாட்டு ஆர்வம் அவரது வாழ்க்கையையே பின்னாளில் தலைகீழாக மாற்றியது. பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன் கொடுத்த உத்வேகத்தால், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பயிற்சிகளை கொடுத்தார். இதன்பின்னர் பல்வேறு போட்டிகளில் சாதிக்கத் தொடங்கிய மாரியப்பனின் திறமையை உணர்ந்த பெங்களூருவைச் சேர்ந்த பயிற்சியாளர் சத்தியநாரயணா தமது பயிற்சி மையத்தில் சேர்த்து மாரியப்பனுக்கு பயற்சி அளிக்கத் தொடங்கினார். இதுவே ரியோ ஒலிம்பிக் போட்டி வரை அழைத்துச் சென்றது. சாதிக்க வைத்தது. பாராலிம்பிக் போட்டியில் 12 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவுக்கு தங்கத்தை பெற்றுக் கொடுத்தார் மாரியப்பன். பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கப்பதக்கமாகவும் அது அமைந்தது.

இந்தநிலையில் தான் டோக்யோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணிக்கு தலைமையேற்று தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் கெளரவம் மாரியப்பனுக்கு வழங்கப்பட்டது. ஆனால் டோக்யோவுக்கு விமானத்தில் செல்லும் போது கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்ததால், அவர் தனிமைப்படுத்தப்பட்டார். 6 முறை பரிசோதனை நடத்தப்பட்ட போதிலும் அனைத்து முறையும் அவருக்கு கொரோனா நெகடிவ் என்றே முடிவு வந்தது. என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொடக்க விழா நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ளவில்லை.

மற்றொரு தடகள வீரரான டெக் சந்த் தேசியக் கொடியை ஏந்திச் சென்றார். இதனால் மாரியப்பன் போட்டியில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் நிலவியது. தடைகளை கடந்து உயரம் தாண்டுதல் T-42 போட்டியில் பங்கேற்றார் மாரியப்பன். மீண்டும் தேசத்தையும், தமிழ்நாட்டையும் சர்வதேச அரங்கில் கௌரவப்படுத்தியிருக்கிறார் இந்த பெரியவடகம்பட்டி மாவீரன்.