இரண்டு ஆண்டுகளுக்கு முன் உடல் எடையை குறைக்க குத்துச்சண்டை பயிற்சியைத் தொடங்கிய ஒரு பள்ளி மாணவி, உஸ்பெகிஸ்தானில் நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை தொடருக்கே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவியான சுப்ரஜா, பரதநாட்டியப் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். 2020ஆம் ஆண்டு தனது உடல் எடையை குறைக்கும் நோக்கத்தில் குத்துச்சண்டை பயிற்சியை தொடங்கினார். பயிற்சியால் குத்துச்சண்டை மீதான ஆர்வம் அதிகரித்ததையடுத்து தினசரி 2 வேளை பயிற்சி பெறத் தொடங்கினார்.
பங்கேற்ற முதல் தொடரிலேயே வெற்றி பெற்றதையடுத்து கடந்த 2 ஆண்டுகளாக மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்க வேட்டையாடி வருகிறார் சுப்ரஜா. இவருக்கு, இந்தியா சார்பில், உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை தொடரில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது. பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபடுத்தியதாக கூறுகிறார் இவரது தாய்.
முறையான கட்டமைப்பு வசதி இல்லாமல், குத்துச்சண்டை உள் அரங்கம் இல்லாமல் தினமும் மூன்று வேளையும் பயிற்சி செய்துவரும் சுப்ரஜா, ஒலிம்பிக் கனவுக்காக தன்னை இப்போதிருந்தே ஆயத்தமாக்கிக் கொண்டுவருகிறார்.
இதையும் படிக்கலாம்: தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!