விளையாட்டு

சிக்ஸர் மழை பொழிந்த இலங்கை - இந்தியாவுக்கு கடினமான 'டார்கெட்'

PT

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை அணி, தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய இளைஞர் படையுடன் கடந்த ஜனவரி 3ஆம் தேதி மும்பையில் மோதிய ஆட்டத்தில் 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.  இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 இன்று (ஜனவரி 5) இரவு 7 மணிக்கு புனேவில் தொடங்கியது. இதில் டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா, பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். இதையடுத்து இலங்கை அணி பேட் செய்ய களமிறங்கியது. அவ்வணியில் தொடக்க பேட்டர்களாக நிசாங்கா மற்றும் மென்டிஸ் களமிறங்கினர். இதில் தொடக்கம் முதலே சரவெடியாய் வெடித்த மென்டிஸ் 31 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து இலங்கை அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்து வெளியேறினார்.

மென்டிஸ் தன் பங்கில் 4 சிக்ஸ்ர்களையும் 3 பவுண்டரிகளையும் அடித்திருந்தார். அவருக்குப் பின் களமிறங்கிய ராஜபக்‌ஷே, 2 ரன் எடுத்த கையுடன் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். அதே நேரத்தில் தொடக்க பேட்டராக களமிறங்கிய நிசாங்காவும் நல்ல ஸ்கோரை எடுத்துக் கொடுத்தார். அவர், தன் பங்குக்கு 33 ரன்கள் எடுத்தார். அப்போது இலங்கை அணி 11.4 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 97 ரன்கள் எடுத்திருந்தது. அதற்குப் பிறகு களமிறங்கியவர்களில் அசலங்கா 19 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து இந்திய அணியை மிரட்டினார். அசலங்கா 4 சிக்ஸர்கள் அடித்திருந்தார். அசலங்காவுக்குப் பிறகு தசூன் சனகா அதிரடி காட்டினார்.

அவர், 22 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் 6 சிக்ஸர்களையும் 2 பவுண்டரிகளையும் அடித்திருந்தார். இறுதியில் இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்துள்ளது. இலங்கை பேட்டர்கள் தரப்பில் இன்று மட்டும் 14 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதுபோல் அக்‌ஷர் படேல் இன்றைய போட்டியில் அதிக நோ பந்துகளை வீசியிருந்தார். அவர், இன்று மட்டும் 8 நோ பந்துகளை வீசியிருந்தார். இந்திய அணி தரப்பில், மாலிக் 3 விக்கெட்களை வீழ்த்தினார். அக்‌ஷர் 2 விக்கெட்டும் சாஹல் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் அடுத்து களமிறங்கி விளையாடி வருகிறது இந்திய அணி.

- ஜெ.பிரகாஷ்