கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 245 ரன்கள் குவித்துள்ளது.
இந்தூரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. தொடக்கம் முதலே கொல்கத்தா அணியின் வீரர்கள் அடித்து விளையாடினர். ஒருபுறம் சுனில் அதிரடி காட்ட, அவருக்கு மற்றவர்களும் நன்கு ஒத்துழைப்பு அளித்து ஆட்டமிழந்தனர். லைன் அதிரடியாக விளையாடி 17 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதலில் பவுண்டரிகளாக அடித்த சுனில் நரேன் பின்னர் சிக்ஸர்களாக விளாசினார். சற்று நேரம் ஒத்துழைப்பு அளித்த உத்தப்பா 24 ரன்னில் ஆட்டமிழந்தார். சுனில் நரேன் 36 பந்துகளில் 75 ரன்கள் எடுத்த நிலையில் டை பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அதில் 4 சிக்ஸர்களும், 9 பவுண்டரிகளும் அடங்கும்.
பின்னர் வந்த ரஸ்சல் 14 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் விளாசி அவுட் ஆனார். 13.6 ஓவர்களில் கொல்கத்தா அணி 150 ரன்கள் குவித்தது. இதனால், அந்த அணி 250 ரன்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரஸ்சல், நரேன் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் வாய்ப்பு குறைந்ததாக தெரிந்தது. இருப்பினும், ஆட்டத்தை கேப்டன் தினேஷ் கார்த்திக் கையில் எடுத்தார்.
தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி ஓவரின் இரண்டாவது பந்தில் தினேஷ் ஆட்டமிழந்த போதும், அதன் பின்னர் இரண்டு பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடிக்கப்பட்டன. அதனால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணியில் டை 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.
இந்த ஐபிஎல் தொடரில் இது தான் ஒரு அணியின் அதிகபட்ச ரன் ஆகும். இதற்கு முன்பாக, கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 219 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்து வந்தது. ஒருவர் கூட சதம் அடிக்காத நிலையில் கொல்கத்தா அணி 245 ரன்களை குவித்துள்ளது. இதனையடுத்து, 246 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பஞ்சாப் அணி விளையாடி வருகிறது.