முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின், தனக்கு சிறுவன் ஒருவன் எழுதிய கடிதத்தை டிவிட்டரில் பதிவிட்டு அன்பை வெளிப்படுத்தி உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவரின் சாதனைகளை பட்டியலிடுவதற்கே அதிக நேரம் எடுக்கும். பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பு ரசிகர்களையும் பெற்ற இவர், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்த ஓய்வு சச்சினுக்கு மட்டுமே தவிர அவரின் புகழுக்கோ, ரசிகர்களுக்கோ இல்லை. இப்போது வரை கிரிக்கெட்டில் சாதனை படைக்கும் பல இளம் வீரர்களின் கனவு நாயகனாகவும் சச்சின் மட்டுமே உள்ளார்.
உலக அளவில் ரசிகர்களை பெற்றுள்ள சச்சினுக்கு, தனது வாழ்நாளில் ரசிகர்களிடம் இருந்து வந்த கடிதங்கள் ஆயிரம் இருக்கலாம். ஆனால் இப்போது அவருக்கு வந்துள்ள இந்த கடிதம் ஸ்பெஷல். இந்த கடிதத்தை மறைக்க மனமில்லாத அவர் அதை வெளிப்படையாக தனது டிவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். ”டியர் சச்சின் அங்கிள்” எனத் தொடங்கும் இந்த கடிதம் 12 வயது சிறுவன் எழுதியது. ஜான்ஹவி சமீப் என்ற 7 ஆம் வகுப்பு படிக்கும் இந்த சிறுவன், தனக்கு சச்சினை மிகவும் பிடிக்கும் என்றும், அவரை சந்திக்க வேண்டுமென்ற ஆசை நீண்டகாலமாக இருப்பதாகவும் ஆனால் அது முடியாத காரியம் என்பதால் இந்த கடிதத்தை எழுதுவதாக தெரிவித்துள்ளான்.
மேலும் சச்சின் இடம்பெறும் பொது நிகழ்வுகள், அவர் ஆடி கலக்கிய பழைய கிரிக்கெட் வீடியோ இவை அனைத்தையும் தான் தினமும் யூடூபில் பார்த்து வருவதாக தெரிவித்துள்ளான். அதே போல் தனது மிகப்பெரிய வேலையே சச்சினின் சிறந்த புகைப்படங்களை சேகரிப்பது என்று சிறுவன் ஜான்ஹவி கடிதத்தில் கூறியுள்ளான். இந்த கடிதத்தை படித்த சச்சின் மிகவும் நெகிழ்ந்துள்ளார். எனவே இதற்கு தனது அன்பை வெளிப்படுத்தும் வகையில் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இந்த கடிதத்தை தான் மிகவும் ரசித்ததாக தெரிவித்துள்ளார்.