விளையாட்டு

3 வது டெஸ்ட் போட்டியில் ரஹானே வித்தியாசமான சாதனை

webteam

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டன் ரஹானே ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார். 

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது ராஞ்சி நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய இந்திய அணி 39 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது. அப்போது ரோகித் ஷர்மா மற்றும் ரஹானே ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். அசத்தலாக ஆடிய ரோகித் ஷர்மா முதல் நாள் ஆட்டத்தில் சதம் கடந்தார். 

இரண்டாம் நாளான இன்று இந்த ஜோடி தொடர்ந்து ரன் வேட்டையில் ஈடுபட்டது. சிறப்பாக விளையாடிய ரஹானேவும் தனது பங்கிற்கு சதத்தை பதிவு செய்தார். இது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ரஹானே அடிக்கும் 11ஆவது சதமாகும். மறுமுனையில் ரோகித் ஷர்மா இரட்டை சதம் கடந்து அசத்தினார். ரஹானே 192 பந்துகளில் 115 ரன்கள் சேர்த்திருந்த போது அவுட் ஆனார். இதன்மூலம் ரோகித்-ரஹானே ஜோடி நான்காவது விக்கெட்டிற்கு 267 ரன்கள் குவித்தனர். 

இதன்மூலம் ரஹானே ஒரு புதிய உலக சாதனையை படைத்துள்ளார். அதாவது ரஹானே இதுவரை 60 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்தப்போட்டிகளில் அவர் 200 முறை அவர் பிற வீரர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இந்த 200 முறையும் ரஹானேவோ அல்லது அவருடன் ஜோடி சேர்ந்த வீரரோ ஒருமுறை கூட ரன் அவுட் முறையில் விக்கெட்டை இழக்கவில்லை. இந்தப் புதிய உலக சாதனையை ரஹானே படைத்துள்ளார்.