வித்தியாசமாக எதையும் நான் செய்வதில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் புவனேஷ்வர்குமார் தெரிவித்தார்.
நியூசிலாந்து அணியுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் அபாரமாக பந்துவீசி 3 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்தார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
பின்னர் அவர் கூறும்போது, ’அமைதியாக இருப்பது என் இயல்பு. அதை மாற்ற முடியாது. பயிற்சியின் போது என்ன செய்கிறேனோ, அதை களத்தில் பயன்படுத்துகிறேன். வித்தியாசமாக எதையும் செய்ய முயற்சிக்க மாட்டேன். வழக்கமாக புதிய பந்தை வீசும்போது, அதை ஸ்விங் செய்வது வழக்கம். அது இப்போது புதிதாக நடப்பது அல்ல. சரியான இடத்தில் பந்துவீசுவதில் கவனம் செலுத்தினேன். உடனடியாக இரண்டு விக்கெட் கிடைத்தது. அது எனக்கு நம்பிக்கையை கொடுத்தது. நம்பிக்கை இருந்தால் போதும், மற்றது எளிதாகிவிடும். வெற்றிக்கு எளிதான வழி என்று இல்லை. ஆனால், நம்பிக்கை இருந்தால் சிறப்பாக முடிக்கலாம். என்னை உற்சாகப்படுத்திக்கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்துக்கு நன்றி. நான் ஒன்றும் அதிக உடல் வலிமை கொண்டவன் இல்லை. இருந்தாலும் சிறப்பாக பந்துவீசுகிறேன். என் பயிற்சியாளருக்கு நன்றி சொல்ல வேண்டும். ’பிட்’டாக இருந்துவிட்டால் உடல்வலிமையும் நம்பிக்கையுடன் வந்துவிடும்’ என்றார்.