விளையாட்டு

"தலைவன் இருக்க பயமேன்"-தோனியை பாராட்டிய சிஎஸ்கே !

"தலைவன் இருக்க பயமேன்"-தோனியை பாராட்டிய சிஎஸ்கே !

jagadeesh

தலைவன் தோனி இருக்கும்போது அணி குறித்த எந்த பயமும் எங்களுக்கு இல்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகள் இந்தாண்டு அமீரகத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்குகிறது. துபாயில் நடைபெற இருக்கும் முதல் போட்டியில் சிஎஸ்கேவும் மும்பை இந்தியன்ஸ் அணியும் களம் காண்கிறது. சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர்களான சுரேஷ் ரெய்னாவும், ஹர்பஜன் சிங்கும் தொடரில் இருந்து சொந்தக் காரணங்கள் காரணமாக விலகியுள்ளனர். இந்நிலையில் சிஎஸ்கே வீரர்கள் இருவர் உள்பட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக இன்னும் பயிற்சியை தொடங்கவில்லை.

இந்நிலையில் சிஎஸ்கே குறித்து அதன் சிஇஓ காசி விஸ்வநாதன் பேசியுள்ளார், அதில் "சிஎஸ்கே அணி பலமாகவே இருக்கிறது, அது குறித்து எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. நம் அணியில் திறமையான கேப்டன் இருக்கிறார் இதுபோன்ற பல கடினமான நேரங்களை ஏற்கெனவே எதிர்கொண்டவர். தலைவன் தோனி அணியை பார்த்துக்கொள்வார். நேற்றிலிருந்து நாங்கள் பயிற்சியையும் தொடங்கிவிட்டோம்" என்றார்.

மேலும் பேசிய அவர் "அணியின் அனைத்து வீரர்களும் துடிப்புடன் இருக்கிறார்கள். சீரான நாள்களில் அனைத்து வீரர்களுடன் ஜூம் கால் மூலம் சந்தித்து உரையாடினோம். கேப்டன், பயிற்சியாளர்களும் தங்களது எண்ணங்களை பகிர்ந்தார்கள். இந்தாண்டு நிச்சயம் சிஎஸ்கே சிறப்பாக விளையாடும். விரைவில் நாடு முழுவதும் துபாயிலும் சிஎஸ்கேவின் "மஞ்சள் நிற" ஜூரம் பற்றிக்கொள்ளும். எப்போதும் போல இந்தாண்டும் சிஎஸ்கே ரசிகர்கள் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுக்கிறார்கள்" என்றார் காசி விஸ்வநாதன்.