விளையாட்டு

'இவர் பெண் ஜாண்டிரோட்ஸ்' - வேற லெவல் ஃபீல்டிங் செய்து அசரவைத்த வீராங்கனை!

webteam

மகளிருக்கான ஐபிஎல்லான டி20சேலஞ்ச் தொடரில் சூப்பர் நோவாஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் ட்ரெய்ல் பிளேசர்ஸ் அணி வெற்றி பெற்று சாம்பியனாக மகுடம் சூடியது.

ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட் செய்த ட்ரெய்ல் பிளேசர்ஸ் அணிக்கு கேப்டன் ஸ்ம்ரித்தி மந்தானா, டாட்டின் ஜோடி வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது. நேர்த்தியாகவும், அதிரடியாகவும் விளையாடிய மந்தானா 68 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீராங்கனைகள் பெரிதளவில் சோபிக்காததால், 20 ஓவர்கள் முடிவில் ட்ரெய்ல் பிளேசர்ஸ் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 118 ரன்களை மட்டுமே எடுத்தது.

எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய சூப்பர் நோவாஸுக்கு, தொடக்க வீராங்கனை அட்டபட்டு 6 ரன்களில் பெவிலியன் திரும்பியது பேரிடியாக அமைந்தது. தனி ஒருவராக போராடிய கேப்டன் ஹர்மன் ப்ரீத் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்ற வீராங்கனைகளின் முயற்சிகளும் பலனளிக்காமல் போனதால் 20 ஓவர்களில் சூப்பர் நோவாஸ் 102 ரன்களை மட்டுமே எடுத்தது. 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ட்ரெய்ல் பிளேசர்ஸ் அணி முதல் முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.

இந்த ஆட்டத்தில் ட்ரெய்ல் பிளேசர்ஸ் அணியின் வீராங்கனை நட்டகன் சந்தம் பாய்ந்து பிடித்த ஒரு பீல்டிங் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பவுண்டரியை நோக்கிச் சென்ற பந்தை பறந்து விழுந்து தடுத்தார் நட்டகன் சந்தம். அவரின் பீல்டிங்கை பார்த்து எதிரணியினரும் கைதட்டி பாராட்டினர். இவர் ஒரு பெண் ஜாண்டிரோட்ஸ் என சமூக வலைதளங்களில் பரலரும் நட்டகனுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.