இலங்கை அணியுடன் மூன்றாவது போட்டியை வென்றதன் மூலம் ஒரு கேப்டனாக சிறப்பாக செயல்பட்டிருக்கிறேன் என்று ரோகித் சர்மா கூறினார்.
இலங்கை அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற
மூன்றாவது போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. தவான் சதம் அடித்தார்.
சுழற்பந்து வீச்சாளர்கள் சேஹல், குல்தீப் யாதவ் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினர். ஆட்ட நாயகன் விருது குல்தீப் யாதவுக்கு வழங்கப்பட்டது. தொடர் நாயகன் விருது தவானுக்கு வழங்கப்பட்டது.
வெற்றிக்குப் பின் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேசும்போது, ’கேப்டனாக முதல் முறையாக ஒரு தொடரை வென்றதில் மகிழ்ச்சி. தர்மசாலாவில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் நாங்கள் மோசமாக தோற்றோம். அதில் இருந்து மீண்டு சிறப்பாக விளையாடி தொடரை கைப்பற்றியுள்ளோம். எங்கள வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். ஒரு கட்டத்தில் இலங்கை அணியின் ரன் ரேட் 6 ஆக இருந்தது. அதனால் எங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டது உண்மைதான். அதைதாண்டி சிறப்பாக செயல்பட்டு வெற்றி தேடி தந்துள்ளனர். முதல் போட்டி எனக்கு சோதனையாக அமைந்தது. இரண்டாவது போட்டியில் ரன்கள் குவித்தோம். இந்தப் போட்டியை வென்றதன் மூலம் கேப்டனாக சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறேன். அடுத்து டி20 போட்டியில் கவனம் செலுத்துவோம்’ என்றார்.
இலங்கை கேப்டன் திசாரா பெரேரா கூறும்போது, ‘முதல் போட்டியில் எளிதாக வென்றோம். இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி தொடரை கைப்பற்ற சிறப்பான வாய்ப்பு அமைந்தது. ஆனால், அதை சரியாக செயல்படுத்த தவறிவிட்டோம். எங்கள் வீரர்கள் அருமையான தொடக்கத்தை தந்தார்கள். ஆனால் அதை நாங்கள் சரியாகத் தொடரவில்லை. நடந்தது முடிந்துவிட்டது. அடுத்து டி20 தொடர் இருக்கிறது. அதில் மட்டுமே இப்போது கவனம் செலுத்துகிறோம்’ என்றார்.