டேனில் மெட்வதேவ் ராய்ட்டர்ஸ்
டென்னிஸ்

கோபத்தில் டென்னிஸ் பேட்டை உடைத்த மெட்வதேவ்.. அம்மாடியோவ் இவ்வளவு அபராதமா..?

கோபத்தின் விளைவு: மெட்வதேவுக்கு கடும் அபராதம்

Prakash J

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில், மெட்வதேவ் தனது கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் ராக்கெட்டை உடைத்ததால், 42,500 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. இது அவரது சம்பளத்தின் 40 சதவீதம் ஆகும்.

2025ஆம் ஆண்டுக்கான கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான அமெரிக்க ஓபன் டென்னிஸ் கடந்த 24ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் 13ஆம் நிலை வீரரான டேனில் மெட்வதேவ், தரநிலை பெறாத பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெஞ்சமின் போன்சியை எதிர்கொண்டார். இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பெஞ்சமின் போன்சி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆட்டம் ஐந்து செட் வரை சென்றும் அது மெட்வதேவிற்குப் பயனில்லாமல் போனது. 3ஆவது செட் டைபிரேக்கரில் மேட்ச் பாயின்ட் 5-4 என இருந்தபோது மைதானத்திற்குள் (Court) போட்டோகிராபர் வந்தார். இதனால் மெட்வதேவ் கடும் கோபம் அடைந்து ஒழுங்கீனமாக நடந்து கொண்டார். தோல்வியடைந்த பின்னர் ராக்கெட்டை சேரில் அடித்து உடைத்தார். மெட்வதேவின் செயல் போட்டியை நேரில் பார்த்தவர்களை அதிர்ச்சியடையச் செய்தது.

மெட்வதேவ்

போட்டி முடிந்த பின்னர், ”கடுமையான அபராதத்தை எதிர்கொள்ள தயாராகி வருகிறேன்” என மெட்வதேவ் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அமெரிக்க டென்னிஸ் சங்கம் மெட்வதேவுக்கு 42,500 டாலர் அபராதமாக விதித்துள்ளது. இது இந்திய பண மதிப்பில் 37.24 லட்சம் ரூபாய் ஆகும். ஒழுங்கீனமாக நடந்ததற்காக 30000 டாலரும், சேரில் அடித்து ராக்கெட்டை உடைத்ததற்காக 12,500 டாலரும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை அவர் முதல் சுற்றுக்காக வாங்கிய சம்பளத்தின் 40 சதவீதம் ஆகும். 2024ஆம் ஆண்டில் கிராண்ட்ஸ்லாம் செயல்திறனைப் பொறுத்தவரை தனது இரண்டாவது சிறந்த ஆண்டை அனுபவித்த ஒரு வீரருக்கு இது ஏமாற்றமளிக்கும் மற்றும் நம்பமுடியாத அளவிற்கு திடீர் வீழ்ச்சியாகும்.