உலக அளவில் கிரிக்கெட் போட்டிகள் நாளுக்குநாள் வளர்ச்சியடைந்து வருகின்றன. ரசிகர்களை ஈர்க்கும் வகையில் மிகக் குறைவான ஓவர்களில் போட்டிகளில் நடத்தப்பட்டு கவனத்தைப் பெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாபோல, இனி வரும் ஆண்டுகளில் டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கிறது.
அதன்படி, Tennis Ball Cricket Premier League என்ற தொடரின் அறிமுக விழா துபாயில் நடைபெற்றது. இந்தத் தொடரின் அறிமுக விழாவினை முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங் அறிமுகப்படுத்தி வைத்தார்.
மேலும், இந்த TBCPL 10-க்கு விளம்பர தூதராகவும் யுவராஜ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக, மும்பை மாவேரிக்ஸ், டெல்லி டைனமிக்ஸ், பெங்களூரூ பிளாஸ்டர்ஸ், கொல்கத்தா கிங்ஸ், சண்டிகர் சாம்பியன்ஸ், ஹைதராபாத் ஹண்டர்ஸ், அகமதாபாத் அவேஞ்சர்ஸ், சென்னை சேலஞ்சர்ஸ் ஆகிய 8 அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.
மே 26ஆம் தேதி முதல் ஜூன் 5ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இத்தொடரில், 31 லீக் போட்டிகள், 4 பிளே- ஆஃப் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன. இப்போட்டிகள் அனைத்தும் இந்தியாவிலேயே நடைபெற இருக்கின்றன. போட்டிகள் நடைபெறும் இடங்கள் விரைவில் அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டிகளை இந்தியாவின் 50 நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இந்தத் தொடருக்கான ஏலம் வரும் மே 5, 6ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கின்றன. இந்திய அளவில் இதற்கான வீரர்களை 8 அணிகளும் தேர்வு செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
”டென்னிஸ் பந்து, கிரிக்கெட்டில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும். தெருவில் விளையாடும் விளையாட்டை தொழில்முறையாக மாற்றும் நோக்கத்துடன் இது தொடங்கப்படுகிறது” என டிபிசிபிஎல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து யுவராஜ் சிங், “TBCPL 10 என்பது ஒரேநேரத்தில் பல இந்திய நகரங்களில் இருந்து தொழில்முறை டென்னிஸ் பந்து கிரிக்கெட் திறமைகளை கொண்டுவரும் முதல் போட்டியாகும். இப்போது, பல நகரங்களில் இந்த வடிவமைப்பை தொழில்முறை நிலைக்கு உயர்த்துகிறோம். பல ஆர்வமுள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு இது ஒரு கனவு நனவாகும். அவர்கள் இப்போது தங்கள் திறமையை வெளிப்படுத்த ஒரு தளத்தைப் பெறுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.