பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் தான் தோனி தலைமையிலான இந்திய இந்திய அணி பாகிஸ்தானை அரையிறுதி போட்டியில் வீழ்த்தி 2011 50 ஓவர் உலக கோப்பை தொடரில் இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்தது. மொகாலியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது.
பெரிய பார்ட்னர்ஷிப் அமைப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சச்சினும், சேவாக்கும் 48 ரன்களுக்கு மட்டுமே பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். தொடர்ந்து வந்த வீரர்களும் சீரிய இடைவெளியில் விக்கெட்டை இழந்தனர். சச்சின் மட்டும் இந்திய அணிக்காக 85 ரன்களை குவித்திருந்தார். அவருக்கு சேவாக், கம்பீர் மற்றும் தோனி கம்பெனி கொடுத்திருந்தனர். ரெய்னாவும் நெருக்கடியான நிலையில் 36 ரன்களை குவித்திருந்தார். அதன் மூலம் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 260 ரன்களை குவித்திருந்தது.
பாகிஸ்தான் அணியின் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் வாஹப் ரியாஸ் 5 விக்கெட்டுகளை வீழத்தியிருந்தார். சயீத் அஜ்மல், அப்ரிடி, முகமது ஹபீஸ் மாதிரியான பந்து வீச்சாளர்களும் எக்கானமியாக பந்து வீசி ரன்களை கட்டுப்படுத்தினர்.
261 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வந்தது. அந்த அணியின் கேப்டனான மிஸ்பா உல் ஹாக் மட்டும் அரை சதம் கடந்து இறுதி வரை போராடினார். முடிவில் 49.5 ஓவர்களுக்கு அந்த அணி 239 ரன்களை சேர்த்து அனைத்து விக்கெடுகளையும் இழந்தது. அதன் மூலம் இந்திய அணி இறுதி போட்டிக்கும் முன்னேறியது. 2003 உலக கோப்பைக்கு பிறகு இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்தது.
இந்திய பந்து வீச்சாளர்கள் அனைவரும் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக சச்சின் தேர்வாகி இருந்தார். அதன் பிறகு இந்திய அணி இறுதி போட்டியில் கோப்பையை வென்று வரலாறு படைத்தது.