இன்று தொடங்கும் 2026 FIFA உலகக்கோப்பையில் ஐரோப்பா, தென்னமெரிக்கா மீண்டும் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், நிபுணர்கள் கணிப்பில் ஸ்பெயின் முதலிடத்தில் உள்ளது. யமால்–நிகோ வில்லியம்ஸ் தாக்குதல், ரோட்ரி, பெட்ரி, காவி, ஒல்மோ நடுக்களம், குக்குரெல்லா, கிரிமெல்டோ, லபோர்டே, குர்பார்சி, கார்சியா தற்காப்பு என அணியின் பலம் அதிகம். ஆனால் உலகத் தர ஸ்ட்ரைக்கர் இல்லாமை பலவீனமாக கூறப்படுகிறது.
கால்பந்து என்றாலே அதில் கடந்த நூறாண்டுகளாக ஐரோப்பிய மற்றும் தென்னமெரிக்க நாடுகளே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதுவரை 22 ஃபிபா (FIFA) கால்பந்து உலகக்கோப்பை தொடர்கள் நடைபெற்றுள்ள நிலையில், இந்த அனைத்து கோப்பைகளையும் இந்த இரண்டு கண்டத்தை சேர்ந்த நாடுகளே வென்றுள்ளன.
அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெறும் FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடரிலும் இந்த இரு கண்டத்தை சேர்ந்த அணிகளில் ஒன்றே வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த ஸ்பெயின் அணியே கால்பந்து உலகக்கோப்பையை வெல்லும் அணியாக பெரும்பாலான கால்பந்து நிபுணர்களால் கணிக்கப்பட்டுள்ளது.
2010-ம் ஆண்டு சாம்பியனும், கால்பந்து தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் அணியுமான ஸ்பெயின் கடந்த 2024-ம் ஆண்டு நடந்த யூரோ கோப்பையை வென்று சாதனை படைத்தது. கால்பந்தின் அடுத்த நட்சத்திரமாக உருவெடுத்துள்ள இளம் வீரர் லாமின் யமால் (Lamin yamal )மற்றும் நிகோ வில்லியம்ஸ் (Nico Williams ) ஜோடியின் தாக்குதல் ஆட்டம் உலகின் அனைத்து அணிகளையும் அச்சுறுத்தும் விதமாக உருவாகியுள்ளது.
அதே போல மத்திய களத்தில் பாலன் டி ஓர் வெற்றியாளரான ரோட்ரி, இளம் வீரர்களான பெட்ரி, காவி, ஒல்மோ கூட்டணியே இந்த அணியின் முதுகெலும்பாக திகழ்ந்து வருகிறது. அதே போல தற்காப்பு ஆட்டத்தில் குக்குரெல்லா (Marc Cucurella), கிரிமெல்டோ (Alejandro Grimaldo), லொரெண்டே (Marcos Llorente), லபோர்டே (Laporte) ஆகிய அனுபவ வீரர்களுடன் குர்பார்சி (Pau Cubarsí) கார்சியா (Eric García) ஆகிய இளம் வீரர்களும் சேர்ந்து வீரர்களும் வலுசேர்க்கிறார்கள்.
அதே நேரம் இந்த அணியின் இடது மற்றும் வலது விங்கர்களான யமால், நிகோ வில்லியம்ஸ் கொடுக்கும் பாஸ்களை கோல்களாக மாற்றும் உலகத்தரம் வாய்ந்த ஸ்ட்ரைக்கர் இல்லாததே அந்த அணியின் ஒரே பலவீனமாக உள்ளது.
இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் அணி என்றால் அது பிரான்ஸ்தான். எம்பாப்பே தலைமையிலான இந்த அணியில் இருக்கும் அனைத்து வீரர்களுமே நட்சத்திர வீரர்களாக இருப்பதே இந்த அணியின் மிகப்பெரும் பலமாகும். முன்களத்தில் எம்பாப்பே (Mbappe), பாலன் டி ஓர் விருதை வென்ற டெம்பெலே (Dembélé ) ஓலிஸ் (Olise) பார்கோலா (Barcola) துராம் (Marcus Thuram) ஆகியோரும், நடுகளத்தில், சூவாமேனி (Aurélien Tchouaméni) ராபியாட் (Adrien Rabiot காண்டே (N'Golo Kanté) ஆகிய நட்சத்திர வீரர்களும் அந்த அணியின் தூணாக விளங்குகிறார்கள்.
அதே போல தற்காப்பில் சாலிபா (Saliba) உபமெக்கானோ (Dayot Upamecano) கொனாட்டெ (Ibrahima Konaté) தியோ ஹெர்னாண்டஸ் (Theo Hernandez) கோண்டே (Jules Koundé) டைக்னே (Digne ) என பெரும் நட்சத்திர பட்டாளமே இந்த அணியில் உள்ளது. இப்படி அனைத்து தரப்பிலும் நட்சத்திர வீரர்கள் இருப்பதோடு, மாற்று வீரர்களாகவும் நட்சத்திர வீரர்கள் இருப்பது இந்த அணிக்கு இருப்பது பெரும் பலமாக இருக்கிறது. எனினும் பிரான்ஸ் அணியின் அதே பலமே அந்த அணியின் பலவீனமாகவும் மாறுவதே அந்த அணி சந்திக்கும் தோல்விகளுக்கும் காரணமாக உள்ளது.
அணியில் அனைவரும் நட்சத்திர வீரர்களாக இருப்பதால் ஒவ்வொவருவரும் குழுவாக செயல்படாமல் தனித்தனியாக செயல்பட்டு வருவது பிரான்ஸ் அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. கடந்த யூரோ கோப்பையில் அந்த அணி தோல்வியை தழுவியதற்கு இதையே கால்பந்து நிபுணர்கள் முக்கிய காரணமாக கூறியிருந்தனர்.
நடப்பு சாம்பியனும் உலக கால்பந்து தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அணியுமான அர்ஜென்டினா அணியும் இந்த உலகக்கோப்பையை வெல்லும் டாப் 3 அணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. 39 வயதான மெஸ்ஸி தலைமையில் இந்த முறையும் வலிமையான அணியாகவே அர்ஜென்டினா அணி இந்த தொடரில் களமிறங்குகிறது.
மெஸ்ஸி, லட்டாரோ மார்ட்டினெஸ் (Lautaro Martínez), ஜூலியன் ஆல்வரேஸ் (Julián Álvarez), அல்மாடா (Thiago Almada), இளம் வீரர் நிக்கோ பாஸ் (Nicolás Paz ), கொன்சலஸ் (Nicolás González) அடங்கிய முன்களம் உலகின் சிறந்த முன்களமாக கருதப்படுகிறது.
அதே போல பரிடஸ் (Leandro Paredes) டி பால் (Rodrigo De Paul) என்சோ பெர்னாண்டஸ் (Enzo Fernández) மேக் அலிஸ்டர் (Alexis Mac Allister) ஆகிய வீரர்கள் நடுகளத்திலும், மோன்டியல் (Gonzalo Montiel) மோலினா (Nahuel Molina) லிசான்ட்ரா மார்ட்டினெஸ் (Lisandro Martínez) ரோமிரோ (Cristian Romero) ஆகியோரை கொண்ட தற்காப்பு வீரர்களும் சிறந்த பார்மில் இருப்பது அர்ஜென்டினா அணியின் வலுவாக கருதப்படுகிறது.
ஒப்பீட்டளவில் பிற முன்னணி அணிகளை விட அர்ஜென்டினா அணியில் நட்சத்திர வீரர்கள் குறைவாக இருந்தாலும், பிற அணிகளை விட ஒரு அணியாக ஒற்றுமையாக ஆடுவதே அர்ஜென்டினா அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. இதன் காரணமாகவே பிற அணிகளை விட குறைவான பலவீனம் கொண்ட அணியாகவும் அர்ஜென்டினா அணி தோற்றமளிக்கிறது.
இந்த விடியோவில் டாப் 3 அணிகளை பார்த்த நாம், அடுத்த வீடியோவில் பிற முக்கிய அணிகளான ரொனால்டோவின் போர்த்துக்கல், பிரேசில், ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகளின் பலம் மற்றும் பலவீனத்தை பார்க்கலாம்.