விளையாட்டு

"இலங்கை, ஜிம்பாப்வே கிரிக்கெட் சுற்றுப் பயணம் ரத்து" - பிசிசிஐ அறிவிப்பு !

"இலங்கை, ஜிம்பாப்வே கிரிக்கெட் சுற்றுப் பயணம் ரத்து" - பிசிசிஐ அறிவிப்பு !

jagadeesh

இலங்கை, ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப் பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பங்கேற்க இருந்தது இந்திய அணி. ஆனால் கொரோனா தொற்றுப் பிரச்னை காரணமாக இந்தச் சுற்றுப் பயணத்தை பிசிசிஐ ரத்து செய்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததையடுத்து மார்ச் 29-ஆம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் போட்டிகள் ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. பின்பு, இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட காரணத்தால் திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டிகள் நடைபெறவில்லை. கொரோனா காரணமாக இந்தியா வந்திருந்த தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியினரும் திரும்பச் சென்றனர்.

இந்நிலையில் ஏற்கெனவே இம்மாதம் திட்டமிடப்பட்டிருந்த இலங்கை, ஜிம்பாப்வே சுற்றுப் பயணத்தை பிசிசிஐ ரத்து செய்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் "இப்போதுள்ள கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு இந்தியா ஏற்கெனவே திட்டமிட்டிருந்த இலங்கை மற்றும் ஜிம்பாப்வே நாட்டுச் சுற்றுப் பயணங்களை ரத்து செய்கிறது. ஜூன் 24 முதல் இலங்கையில் 3 ஒருநாள் போட்டிகளிலும் 3 டி20 போட்டிகளிலும் விளையாட இருந்தது. அதேபோல ஜிம்பாப்வேயுடன் ஆகஸ்ட் 22 முதல் திட்டமிடப்பட்டிருந்தது.

பிசிசிஐ இப்போதுள்ள சூழ்நிலையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட்டை தொடங்க ஆர்வமாக இருக்கிறோம். ஆனால் அதற்காக எப்போதும் அவசரகதியில் முடிவெடுக்கமாட்டோம். இப்போது நாங்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பைக் கொடுத்து வருகிறோம். இப்போதுள்ள கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு முழுமையாக ஒத்துழைத்து வருகிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.