விளையாட்டு

“இந்தியா 200 ரன்கள் தாண்டுவதே கஷ்டம்” - ரிக்கி பாண்டிங்

EllusamyKarthik

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 200 ரன்களை தாண்டுவதே கஷ்டம் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இந்த போட்டியில் இந்தியா வெல்ல 407 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா. 

“ஆஸ்திரேலிய அணியின் பலமான பவுலிங் கூட்டணி இந்திய வீரர்களை கட்டுப்படுத்தி மிகச் சுலபமாக இந்த போட்டியில் வெல்லும். எனக்கு தெரிந்து இந்தியா 200 ரன்களை தாண்டுவதே கஷ்டம்தான். அது தான் நிஜமும் கூட” எனத் தெரிவித்துள்ளார் பாண்டிங். அவர் சொன்ன சில நிமிடங்களுக்கு எல்லாம் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 34 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்களை குவித்திருந்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கில் மற்றும் ரோகித் ஷர்மா நல்ல தொடக்கத்தை கொடுத்திருந்தனர். இருப்பினும் இருவரும் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். ரோகித் 52 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இந்த ஆட்டத்தில் இந்தியாவுக்கு உள்ள ஒரே வாய்ப்பு அனுபவ பேட்ஸ்மேன்கள் ரஹானேவும், புஜாராவும் களத்தில் இருப்பதுதான். அது நடந்தால் மட்டும் தான் தோல்வியிலிருந்து இந்தியா தப்பிக்க முடியும். ரஹானேவும், புஜாராவும் அந்த வரலாற்றை படைக்கிறார்களா என்பதை பார்க்கலாம்.