உலகக் கோப்பையில், இன்று நடக்கும் அரையிறுதி போட்டியில் ரவீந்திர ஜடேஜாவைக் களமிறக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை தொடரில், முதலாவது அரையிறுதியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்தப் போட்டியில், இந்திய அணியின் ஆடும் லெவனில், ரவீந்திர ஜடேஜாவை கண்டிப்பாகச் சேர்க்க வேண்டும் என்று கவுதம் காம்பீர் கூறியுள்ளார்.
அவர் கூறும்போது, ’’இந்திய அணி இன்னொரு பந்துவீச்சாளரோடு களமிறங்க வேண்டும். தினேஷ் கார்த்திக் இடத்தில் ஜடேஜாவை களமிறக்கலாம். சுழல் பந்துவீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் நம்பிக்கை அளிப்பவராக அவர் இருக்கிறார்’’ என்று தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வெங்கடேச பிரசாத்தும் இதையே தெரிவித்துள்ளார். ‘’நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சு சிறப்பாக இருக்கிறது. அனுபவம் வாய்ந்த போல்ட்டுடன் பெர்குசானும் நன்றாகப் பந்துவீசுகிறார். அதனால் இந்திய அணி இன்னொரு பந்துவீச்சாளரோடு களமிறங்க வேண்டும். அந்த இடத்துக்கு நானாக இருந்தால் ரவீந்திர ஜடேஜாவை சேர்ப்பேன்’’ என்று தெரிவித்துள்ளார்.