விளையாட்டு

ஆஸி. அணியை வீழ்த்தாமலேயே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்கு இந்தியா தகுதி! காரணம் இவர்தான்

JustinDurai

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியா - இந்தியா கிரிக்கெட் அணிகள் இடையேயான பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ள நிலையில் 4வது டெஸ்ட் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இதை வென்றால் மட்டுமே எந்தவித சிக்கலும் இன்றி இறுதிபோட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் இந்தியா இருந்தது.

எதிர்வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இந்தியாவுக்கு இரண்டு வாய்ப்புகள் இருந்தன. ஒன்று, 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றே ஆகவேண்டும். அல்லது இலங்கை-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் இலங்கை தோற்க வேண்டும். ஏனெனில் தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள இந்திய அணி ஒருவேளை தோற்றுவிட்டால், 3வது இடத்தில் உள்ள இலங்கைக்கு தான் வாய்ப்பு இருந்தது. அந்த அணி நியூசிலாந்துடன் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.  அதில் 2 போட்டிகளிலுமே வென்றால் மட்டுமே இறுதிச் சுற்றுக்கு முன்னேறும். ஒன்றில் தவறவிட்டால் கூட இந்தியாவுக்கு வாய்ப்பு இருக்கும்.

அந்தவகையில் நியூசிலாந்துடனான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்று போராடி தோல்வியடைந்துள்ளது. இலங்கை அணியின் இந்த தோல்வியின் மூலம் புள்ளிகள் அடிப்படையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. வரும் ஜூன் 7ம் தேதி லண்டனில் தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொள்கிறது.

கடைசி போராடிய வில்லியம்சன் - கொண்டாடும் இந்திய ரசிகர்கள்

இலங்கைக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணியை இறுதிவரை களத்தில் நின்று வெற்றி பெற வைத்துள்ளார் கேப்டன் கேன் வில்லியம்சன். இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 355 ரன்களும், நியூசிலாந்து அணி 373 ரன்களும் எடுத்தன. பின்னர் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 302 ரன்கள் எடுக்க நியூசிலாந்துக்கு 285 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இலங்கை அணியின் பந்துவீச்சு அபாரமாக இருந்ததால் வெற்றி இலங்கையின் பக்கமே அதிகமாக இருந்தது. இருப்பினும் களத்தில் நங்கூரமாக நிலைத்து நின்று ஆடி கேப்டன் வில்லியம்சன் சதம் அடித்தார். அத்துடன், இறுதிவரை களத்தில் நின்று 121 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணியை வெற்றி பெற செய்தார். நியூசிலாந்து அணியின் வெற்றியே இந்திய அணியை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் சிரமம் இல்லாமல் நுழைய வைத்துள்ளது.