விளையாட்டு

தோல்விக்கு பழி தீர்த்தது இந்திய அணி: தொடரை கைப்பற்றி அசத்தல்

தோல்விக்கு பழி தீர்த்தது இந்திய அணி: தொடரை கைப்பற்றி அசத்தல்

rajakannan

இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 2 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்தது. இருப்பினம், குல்தீப் யாதவ் மற்றும் சாஹலில் அபாரமான பந்துவீச்சில் விக்கெட்டுக்கள் மளமளவென சாய்ந்தது. 44.5 ஓவர்களில் 215 ரன்களுக்கு இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் தரங்கானா 95, சமரவிக்ரமா 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். குல்தீப், சாஹல் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

இதனையடுத்து, 216 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியில், கடந்த முறை இரட்டை சதம் விளாசிய கேப்டன் ரோகித் சர்மா 7 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். இதனையடுத்து ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்தனர். முதலில் நிதானமாக விளையாடிய இந்த ஜோடி பின்னர் பவுண்டரிகளை தொடர்ச்சியாக விளாசியது. பந்துகளை வீணடிக்காமல் ரன்களை சேர்த்து வந்தனர். இதனால் இந்திய அணி 15 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. ஸ்ரேயாஸ் 44 பந்துகளிலும், தவான் 46 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸ்ரேயாஸ் 65(63) ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அப்போது, இந்திய அணி 22.4 ஆவது ஓவரில் 149 ரன்கள் எடுத்திருந்தது.

பின்னர், தவான் உடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். இறுதியில் அதிரடியாக விளையாடிய ஷிகர் தவான் 85 பந்துகளில் சதம் விளாசினார். இந்திய அணி 32.1 ஓவர்களில் 219 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி ஒருநாள் தொடரை வென்றுள்ளது. தவான் 100, தினேஷ் கார்த்திக் 26(31) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

சதம் அடித்த குல்தீப் ஆட்டநாயகன் விருதினையும், ஷிகார் தவான் ஆட்டநாயகன் விருதினையும் பெற்றனர். முதல் போட்டியில் படுதோல்வி அடைந்த இந்திய அணி அடுத்த இரண்டு போட்டிகளில் அபார வெற்றி பெற்று தொடரை வென்று பழிதீர்த்து கொண்டது. இந்திய பேட்ஸ்மேன்களும் இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடினர்.