இந்திய கிரிக்கெட் அணி வரும் வியாழன் அன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னி மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இந்நிலையில் அந்த போட்டியை முன்னிட்டு அண்மையில் வீரர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
“ஜனவரி 3, 2021 அன்று இந்திய அணி வீரர்கள் மற்றும் அணியில் இடம்பெற்றுள்ள அனைவருக்கும் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் யாருக்கும் தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது” என பிசிசிஐ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ரோகித் ஷர்மா உட்பட ஐந்து வீரர்கள் கொரோனா விதிமுறைகளை மீறியதாக புகார் எழுந்துள்ள நிலையில் இதை தெரிவித்துள்ளது பிசிசிஐ. ஐந்து பேரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலும் சிட்னி போட்டிக்கு தயாராகும் வகையில் பயிற்சி மேற்கொள்ளவும், அணியினருடன் பயணம் செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிசிசிஐ மற்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா சேர்ந்து விசாரித்து முடிவு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடர் 1 - 1 என்ற சமநிலையில் இப்போது உள்ளது.