விளையாட்டு

கேப்டனாக சாதித்த ரோகித் சர்மா - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்

கேப்டனாக சாதித்த ரோகித் சர்மா - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்

சங்கீதா

இலங்கைக்கு எதிரான தொடரை கைப்பற்றியதன் மூலம் இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 4-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021-2023 தொடருக்கான புள்ளிப் பட்டியல், ஒவ்வொரு அணியும் வெற்றிபெறுவதை வைத்து, சதவிகிதங்கள் அடிப்படையில் கணக்கிடப்பட்டு வருகிறது. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். கடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதியநிலையில், நியூசிலாந்து அணி வெற்றிபெற்று கோப்பையை தட்டிச் சென்றது.

ஆனால், இந்த வருடம் இந்த இரண்டு அணிகளும் புள்ளிப்பட்டியலில் பின் தங்கியிருந்தது. கடந்த மார்ச் 7-ம் தேதி நிலவரப்படி, இந்திய அணி 10 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்வி, 2 டிராவுடன் 65 புள்ளிகள், 54.16 சதவிகிதத்துடன் ஐந்தாவது இடத்தில் இருந்தது. இதற்கு அடுத்து நியூசிலாந்து அணி இருந்தது.

இலங்கை அணி 3 போட்டிகளில் இரண்டு வெற்றி, ஒரு தோல்வியுடன் 24 புள்ளிகள், 66.66 சதவிகிதத்துடன் மூன்றாவது இடத்தில் இருந்தது. இந்நிலையில், இலங்கை அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியநிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 4-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

அதன்படி, 11 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி, 6 வெற்றிகள், 3 தோல்விகள், 2 டிராவுடன் 58.33 புள்ளிகளுடன் 5-வது இடத்திலிருந்து 4-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் டெஸ்ட் போட்டியிலேயே ரோகித் சர்மா, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

இலங்கை அணி இந்தப் போட்டியில் தோல்வியடைந்தன் மூலம் 50 சதவிகித புள்ளிகளுடன் 3-வது இடத்திலிருந்து, 5-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. உலக டெஸ்ட்சாம்பியன்ஷிப் புள்ளிபட்டியலில் ஆஸ்திரேலிய அணி 77.77 சதவிகித புள்ளிகளுடன் முதல் இடத்திலும், 66.66 சதவிகித புள்ளிகளுடன் பாகிஸ்தான் இரண்டாம் இடத்திலும், தென்னாப்பிரிக்கா அணி 60 சதவிகித புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.