விளையாட்டு

இனி விவோ இல்லை.. ‘டாடா ஐபிஎல்’தான்.. ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரை தட்டி தூக்கிய டாடா நிறுவனம்

EllusamyKarthik

இந்திய நாட்டில் நடைபெற்று வரும் ஃப்ரான்சைஸ் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் டி20 கிரிக்கெட்டின் டைட்டில் ஸ்பான்சராகி உள்ளது டாடா குழுமம். இதனை ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் உறுதி செய்துள்ளார். இதன் மூலம் சீன நிறுவனமான விவோ வசமிருந்த டைட்டில் ஸ்பான்சர்ஷிப் டாடா குழுமத்திற்கு கைமாற்றப்பட்டுள்ளது. ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

சுமார் 440 கோடி ரூபாய்க்கு விவோ நிறுவனம் டைட்டில் ஸ்பான்சராக ஐந்து ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்தது. அதன்படி 2018, 2019 மற்றும் 2021 என மூன்று ஆண்டுகள் விவோ நிறுவனம் ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்சராக இருந்துள்ளது. மேலும் இரண்டு ஆண்டுகள் விவோ ஸ்பான்சர்ஷிப் எஞ்சியுள்ள நிலையில் டாடா குழுமத்திடம் தற்போது அது கைமாற்றப்பட்டுள்ளது. 

2022 மற்றும் 2023 என இரண்டு சீசன்களிலும் டாடா டைட்டில் ஸ்பான்சராக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி ‘டாடா ஐபிஎல்’ என புரொமோஷன் செய்யப்படும் என தெரிகிறது. வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 தேதிகளில் ஐபில் 2022 சீசனுக்கான மெகா ஏலம் நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்திய கிரிக்கெட் வாரியம் அதனை உறுதி செய்யவில்லை.