வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில், பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றது.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வந்தது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இரு அணிகளும் விளையாடின. முதல் ஒரு நாள் போட்டியில், தமிம் இக்பால், ஷகில் அல் ஹசன் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் பங்களாதேஷ் வெற்றி பெற்றது. தமிம் இக்பால் சதம் அடித்திருந்தார்.
இரண்டாவது ஒரு நாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அந்த அணியின் ஹெட்மையர் சதமடித்தார். அவர் 93 பந்துகளில் 7 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 125 ரன்கள் குவித்தார். இதையடுத்து இரு அணிகளும் இந்த தொடரில் 1-1 என்ற சமநிலை வகித்தன. இந்நிலையில் தொடர் யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும் மூன்றாவது ஒரு நாள் போட்டி நேற்று நடந்தது.
டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி தமிம் இக்பாலும் அனமுல் ஹக்கும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஹக் 10 ரன்கள் எடுத்திருந்த போது ஹோல்டர் பந்துவீச்சில் அவுட் ஆனார். அடுத்த ஷகிப் அல் ஹசன் வந்தார். அவர் 37 ரன்கள் எடுத்து நர்ஸ் பந்துவீச்சில் பாலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த முஷிபிஹுர் ரஹிம் 12 ரன்கள் எடுத்த நிலையில் நர்ஸ் பந்துவீச்சில் போல்டானார். பின்னர் கேப்டன் மோர்டாஸா 36 ரன்கள் எடுத்த நிலையில் ஹோல்டர் பந்தில் காலியானார்.
ஒரு பக்கம் விக்கெட் விழுந்துகொண்டிருந்தாலும் தொடக்க ஆட்டக்காரர் தமிமும் மஹமுத்துல்லாவும் அதிரடியாக ஆடினர். தமிம் 103 ரன்கள் எடுத்து பிஷூ பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தமிமுக்கு இது 11 வது சதம். இந்த தொடரின் முதல் போட்டியிலும் அவர் சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 301 ரன்கள் எடுத்தது. கடைசி 10 ஓவர்களில் மட்டும் அந்த அணி 96 ரன்கள் எடுத்தது.
(கிறிஸ் கெய்ல்)
பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கிறிஸ் கெய்ல், லெவிஸ் இருவரும் அதிரடியாக ஆட முடிவு செய்தனர். ஆனால், லெவிஸ் 13 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் ஹோப் வந்தார். இவரும் கெயிலும் அதிரடியாக ஆடினர். கெய்ல் 5 சிக்சர், 6 பவுண்டரியுடன் 73 ரன்கள் எடுத்து ரூபெல் ஹுசைன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஹோப் 64 ரன்கள் எடுத்தார். கடந்த போட்டியில் சதமடித்த ஹெட்மையர் 30 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ரோவ்மன் பாவெல் அதிரடியாக ஆடி போட்டியை மாற்ற நினைத்தார். ஆனால் மற்றவர்கள் யாரும் நிலைத்து நிற்காததால் போட்டி கைவிட்டுப் போனது. அவர் 41 பந்தில் ஆட்டமிழக்காமல் 74 ரன்கள் எடுத்தார். 50 ஓவர் முடிவில் அந்த அணியால் 6 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதையடுத்து பங்களாதேஷ் அணி, 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. ஆட்டநாயகன் விருது தமிம் இக்பாலுக்கு வாங்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் பங்களாதேஷ் அணி, வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் முதன் முறையாக தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. கடந்த 9 வருடங்களுக்குப் பின் பங்களாதேஷ் அணி வெளிநாட்டில் கைப்பற்றிய தொடரும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.