சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார் தமிழக வீரர் ஷரத்கமல்.
5 முறை ஒலிம்பிக்கில் பங்கேற்று விளையாடியிருக்கும் ஷரத்கமல், சர்வதேச போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார்.
சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற WTT ஸ்டார் கன்டென்டர் 2025 போட்டியில் 16வது சுற்றில் தோல்வியடைந்த பிறகு, இந்திய டேபிள் டென்னிஸ் நட்சத்திரம் அச்சந்தா ஷரத் கமல் தனது புகழ்பெற்ற வாழ்க்கைக்கு ஓய்வளித்தார்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய டேபிள் டென்னிஸை தாங்கிவரும் 42 வயதான ஷரத், இந்த மாத தொடக்கத்தில் தனது சொந்த ஊரான சென்னையில் நடைபெறும் போட்டியுடன் தொழில்முறை வாழ்க்கைக்கு ஓய்வளிக்க விரும்புவதாக தெரிவித்தார். அதன்படி தற்போது தொடரிலிருந்து வெளியேறியதற்கு பிறகு ஓய்பு பெறுகிறார் ஷரத் கமல்.
போட்டியில் தோல்விக்கு பிறகு பேசிய அவர், "இதுதான் சரியான நேரம். நான் ஆறு மாதங்களுக்கு முன்பே இந்த முடிவை எடுத்துவிட்டேன். நீங்கள் அந்த முடிவை எடுத்துவிட்ட பிறகு, உங்களால் உங்களுடைய சிறந்த ஆட்டத்தை கொடுக்க முடியாது, மனமும் வேலை செய்யாது" என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.