இந்தியாவுக்காக விளையாடும் தமிழக வீரர் நடராஜனை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாராட்டியுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி கான்பரா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல்முறையாக இந்தியாவுக்காக விளையாட உள்ள தமிழக வீரர் ‘யார்க்கர்’ ஸ்பெஷலிஸ்டான இடக்கை பந்துவீச்சாளர் தங்கராசு நடராஜன்.
அண்மையில் முடிந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய நடராஜன் அற்புதமாக பந்து வீசி சர்வதேச பேட்ஸ்மேன்களையே திக்குமுக்காட செய்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய தொடரில் விளையாடும் வாய்ப்பையும் பெற்றார்.
இந்நிலையில் நடராஜனை பாராட்டி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார். “ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்காக தனது முதல் வெற்றிப்பயணத்தை துவங்கியிருக்கும் தமிழக வீரர் நடராஜன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்! தனது அபாரத் திறமையால் தாய்நாட்டிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கும் நடராஜன் அவர்களின் சாதனைப்பயணம் தொடரட்டும்” என அந்த ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
இந்த போட்டியில் 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்களை குவித்தது இந்தியா. தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி அந்த இலக்கை விரட்டி வருகிறது.