விளையாட்டு

டு பிளிசிஸ் அபார சதம்: இலங்கையை எளிதில் வென்றது தென்னாப்பிரிக்கா!

டு பிளிசிஸ் அபார சதம்: இலங்கையை எளிதில் வென்றது தென்னாப்பிரிக்கா!

webteam

இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.

இலங்கை கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணி வென்று சாதனைப் படைத்தது. இதன் மூலம் தென்னாப்பிரிக் காவில் டெஸ்ட் தொட ரை வென்ற முதல் ஆசிய கிரிக்கெட் அணி என்ற பெருமையை இலங்கை அணி பெற்றது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இப்போது நடந்து வருகிறது. முதலாவது ஒரு நாள் போட்டி, ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த இலங்கை, 47 ஓவர்களில் 231 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. ஒஷாடே பெர்னாண்டோ 49 ரன், குசல் மென்டிஸ் 60 ரன் எடுத்தனர். தென்னாப்பிரிக்க தரப்பில் வேகப்பந்துவீச்சாளர் நிகிடி, சுழல் பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 38.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 232 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. கேப்டன் டுபிளிசிஸ் சதம் அடித்தார். அவர் 114 பந்துகளில் 112 ரன் எடுத்தார். தொடக்க ஆட்டக்காரர் டி காக், 72 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தார். சதம் அடித்த டுபிளிசி ஸ்-க்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி 6-ஆம் தேதி செஞ்சூரியனில் நடக்கிறது.