கடுமையாக உழைத்தால், வெற்றி நிச்சயம் என்பதை உணர்த்தும் வகையில் ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளதாக, தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன் புதிய தலைமுறைக்கு அளித்த தனித்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டு ஜூலை மாதம் ஜப்பான் தலைநகரமான டோக்கியோவில் தொடங்குகின்றன. டேபிள் டென்னிஸ் பிரிவில் பங்கேற்கும் வீரர்களுக்கான தகுதிச் சுற்று போட்டிகள் தோஹாவில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன், தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார்.
தகுதிச் சுற்றில் 4க்கும் பூஜ்ஜியம் என்ற செட் கணக்கில், பாகிஸ்தான் வீரர் முகமது ரமீசை தோற்கடித்து, ஒலிம்பிக்கில் விளையாட தகுதியடைந்துள்ளார். முதல்முறையாக சத்யன் ஞானசேகரன் ஒலிம்பிக் போட்டியில் களம் இறங்குகிறார். புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டியளித்த அவர், பல வருட உழைப்பிற்கான பலன் தற்போது கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.