விளையாட்டு

'வயசாக வயசாகத்தான் சிறப்பாக விளையாடுறேன்' - சரத் கமல் உற்சாகம்

webteam

'வயசாக வயசாகதான் நான் சிறப்பாக விளையாடி வருகிறேன்; இதற்கு எனது உடற்பயிற்சி மிக முக்கியமானதாக உள்ளது' என டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இங்கிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பங்கேற்று 3 தங்கம், 1 வெள்ளி பதக்கங்களை வென்ற டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமலுக்கு சென்னை விமான நிலையத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சரத் கமல், ''அறையிறுதிக்கு பிறகு அதிக நம்பிக்கையோடு விளையாடினேன். கடினமாக ஆரம்பித்த போட்டி பின் சிறப்பாக அமைந்தது.

2006-ம் ஆண்டு 2 தங்கம் வென்றிருந்தேன், இந்த முறை 3 தங்கம் வென்றுள்ளேன். அதனால், வாழ்க்கையில் சிறப்பான போட்டியாக அமைந்துள்ளது” எனத் தெரிவித்த சரத் கமல், விளையாட்டிற்கு அரசு அதிக கவனம் செலுத்தி, முக்கியத்துவம் வழங்க வேண்டும், மைதானங்கள் அதிகமாக உருவாக்கித் தர வேண்டும் என வேண்டுகோள் வைத்தார்.

“அதேபோல, வீரர்கள், வெளிநாடுகளுக்கு சென்று பயிற்சி பெறுவது முக்கியம். சிறுவயது முதல் விளையாட்டை முதன்மையாக எடுக்க முடியாத நிலை தமிழகத்தில் உள்ளது. படிப்பு முக்கியமானதாக இருப்பதால், விளையாட்டில் மாணவர்களுக்கு கவனம் செலுத்த முடிவதில்லை. சிறுவயதில் என்னோடு இருந்தவர்கள் என்னை விட சிறப்பாக விளையாடக் கூடியவர்கள்; ஆனால் அவர்கள் படிக்க சென்றதால் விளையாட்டை தொடர முடியவில்லை. வயசாக வயசாக இன்னும் சிறப்பாக விளையாடுகிறேன்” என சரத்கமல் நெகிழ்ச்சியோடு தெரிவித்தார். வரக்கூடிய சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்று நாட்டிற்கு பதக்கங்களை வென்று தருவேன் எனக் கூறினார்.

இதையும் படிக்க: சேவாக்கை அவுட்டாக்க விரித்த வலை; ஆனால் நடந்தது வேறு’-நினைவுகளை பகிர்ந்த பிரெட் லீ