யுவராஜ் சிங் - சவுரவ் கங்குலி DC
T20

குரு - சிஷ்யன் ஒரே அணியில்.. கங்குலியுடன் கைக்கோர்த்த யுவராஜ் சிங்! அலப்பற கன்ஃபார்ம்!

டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் கங்குலியுடன் இணையவுள்ளார் அவரின் சிஷ்யனான யுவராஜ் சிங்.

Rishan Vengai

டெல்லி கேபிடல்ஸ் அணியில் கங்குலி தலைமை பயிற்சியாளராகவும், யுவராஜ் சிங் பேட்டிங் பயிற்சியாளராகவும் இணைந்துள்ளனர். குரு-சிஷ்யன் கூட்டணி மீண்டும் ஒரே அணியில் இணைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடக்க சீசனிலிருந்து விளையாடிவரும் டெல்லி கேபிடல்ஸ் அணி, இதுவரை ஒரேயொரு முறை மட்டுமே இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் 2020 ஐபிஎல் இறுதிப்போட்டிவரை முன்னேறிய டெல்லி அணி, இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக தோல்வியை சந்தித்து கோப்பையை இழந்தது. அதற்குபிறகு பல்வேறு பயிற்சியாளர்கள், கேப்டன்கள் தலைமையில் விளையாடினாலும் டெல்லி அணியால் ஃபைனலுக்கு தகுதிபெறவே முடியவில்லை.

இந்நிலையில் தான் 2027 ஐபிஎல் சீசனில் முதல் கோப்பையை தூக்கவேண்டுமென இந்தியாவின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களான சௌரவ் கங்குலி மற்றும் யுவராஜ் சிங் இருவரையும் பயிற்சியாளர்களாக நியமித்துள்ளது டெல்லி கேபிடல்ஸ் அணி. அந்தவகையில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக கங்குலி நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், யுவராஜ் சிங் அஸிஸ்டண்ட் மற்றும் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்மூலம் கேப்டன் - ஜூனியர், குரு - சிஷ்யன் இருவரும் மீண்டும் ஒரே அணியில் இடம்பெறுகின்றனர். யுவராஜ் சிங்கின் முதல் கேப்டனான கங்குலி, யுவியின் சிறந்த கிரிக்கெட் வாழ்க்கையை வடிவமைத்தவர்களில் முக்கியமானவர். இளம் வயதிலேயே அணிக்குள் வந்துவிட்ட யுவராஜ் சிங்கை ஒரு லெஜெண்ட் கிரிக்கெட்டராக மாற்றிய பெருமை கங்குலிக்கும் உண்டு. 90ஸ் கிட்ஸின் விருப்ப ஜோடியான இவர்கள் இருவரும் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இணைந்திருப்பது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இவர்கள் இருவர் மட்டுமில்லாமல் முன்னாள் இலங்கை பந்துவீச்சு ஜாம்பவான் சமிந்தா வாஸ் பவுலிங் கோச்சாக வரவிருப்பதாக கூறப்படுகிறது.